மறுமலர்ச்சி என்பது மீண்டும் மலர்தல் அல்லது புத்துயிர்ப்பு பெறல் என்பதாகும். எனவே மறுமலர்ச்சி என்பது கிரேக்க உரோம காலத்து இலக்கியம் கலை என்பன புனர்நிர்மானம் செய்யப்பட்டமையே குறிக்கும். அதே வேளை பரந்த அடிப்படையில் கிரேக்க உரோம இலக்கியம் கலை என்பவற்றிலிருந்து அறியப்பட்ட பண்டைய நாகரிகங்களின் அடிப்படையில் ஐரோப்பிய அரசியல், பொருளாதார, அறிவியல், கலாசாரம், சமூகம் என்பவற்றில் ஏற்பட்ட புத்தெழுர்ச்சி எனலாம்.
வேறு வகையில் கூறுவதாயின் மத்திய காலத்திற்கும் தற்காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பாவில் நடைபெற்ற முக்கிய மாற்றங்கள் அனைத்தையும் மறுமலர்ச்சி என்று குறிப்பிட முடியும்.
மறுமலர்ச்சி ஏற்படுவதற்கான காரணங்கள்
ஐரோப்பாவில் தோன்றிய மறுமலர்ச்சிக்கு தாயகமாக விளங்கியது இத்தாலியாகும். இவ்வாறு இத்தாலியில் முதலில் மறுமலர்ச்சி தோன்றி அது ஏனைய நாடுகளில் பரவியது. இத்தாலியில் முதலில் மறுமலர்ச்சி ஏற்பட்டமைக்கான காரணங்களை உட்காரணங்கள், வெளிக்காரணங்கள் என இரண்டாக பிரித்து நோக்க முடியும். இதில் உட்காரணங்கள் எனும் போது இத்தாலியில் அக்காலத்தில் நிலவிய பொருளாதார, சமூக, அரசியல் பிரச்சினைகளின் விளைவுகளையும், வெளிக் காரணமாக கொண்தாந்திநோபிள் துருக்கியரால் கைப்பற்றப்பட்டமையையும் கூறமுடியும்.
உட்காரணிகள்
ஐரோப்பாவில் குறிப்பாக இத்தாலியில் கி.பி1000ம் ஆண்டிலிருந்து நகரங்கள் தோண்ற ஆரம்பித்தன. இவ் நகரங்கள் தோன்றுவதற்கு இத்தாலியில் தோன்றிய வியாபாரம் கைத்தொழில் போன்றவற்றின் விருத்தி காரணமானது. குறிப்பாக இத்தாலிய வியாபாரிகள் கம்பனிகளை தாபித்து கப்பல்களில் அலெக்ஸாந்திரியா, கொன்ஸ்தாந்திநேதபிள் ஆகிய நகரங்களுக்குச் சென்று பல்வேறு பண்டங்களை வாங்கி ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு விற்று வந்தனர். புதிய நாடுகளுக்கு சென்று புதிய மக்களுடன் உறவாடிய இவர்கள் சேவை மானிய முறையுடன் போராடி சுயாட்சியை தாபிக்க முயன்றனர். இதனால் முதலில் இத்தாலியில் மறுமலர்ச்சி ஏற்படுவது சாத்தியமானது.
இத்தாலியில் வளர்ச்சியடைந்த பொருளாதார அமைப்பும் சர்வதேச வர்த்தகத்தின் விருத்தியும் இத்தாலியில் வர்த்தக முதலாளித்துவம் தோன்றுவதற்குக் காரணமாகியதுடன் வர்த்தகக் கம்பனிகளும் வங்கித் தொழிலும் வளரக் காரணமாகியது. இவற்றில் ஈடுபட்டோர் அரசியலிலும் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கினர். இக்காலத்தில் மிலான், ஜெனோவா, பாடுவா, வெனீஸ், புளோரன்ஸ் போன்றன முக்கி நகரங்களாக இருந்தன. இந்நகரங்களில் தோன்றிய செல்வந்த வர்க்கத்தினர் தமது வர்த்தக முயற்சிகளுக்கு அரசர்களின் ஆதரவை நாடியதுடன் அரசருக்கும் பண உதவிகளை வழங்குபவராய் இருந்தனர். இதனால் படிப்படியாக அரசரின் செல்வாக்கும் பலமும் அதிகரித்ததால், பிரபுக்களின் பலம் குறைந்து போனது. இந்நிலையானது மானியமுறையின் வீழ்ச்சிக்கு உதவியதுடன் இத்தாலியில் மறுமலர்ச்சி ஏற்படுவதற்கும் காரணமானது.
இத்தாலிய நகரங்களில் வாழ்ந்த செல்வந்தர்கள் இலக்கியங்களினதும் கலைகளினதும் வளர்ச்சிக்கு உதவினர். இதனால் பண்டைய கிரேக்க, உரோம இலக்கியங்கள் பயிலப்பட்டது மட்டுமன்றி பண்டைய இலக்கியங்களும் கலைகளும் மீள் உருவாக்கம் பெற்றன. குறிப்பாக இத்தாலியின் புளோரன்ஸில் வாழ்ந்த தாந்தே, பெட்ராக், பொக்காஸியோ இலக்கியத் துறை வளரக் காரனமாயினர். மேலும் பழைமையான கிரேக்க உரேமக் கட்டிடக் கலையின் சிதைவுகள் கலைஞர்களது ஆக்க சிந்தனையைத் தூண்டின. டோறிக், ஐயோனிக், கொறிந்திய முறைப்படி கட்டிடங்கள் அமைக்கப்பட்டதுடன் ஏனைய கலைகளும் லௌகீகப் போக்கில் அமைக்கப்படும் தன்மையுடையனவாய் விளங்கின. இக்காலக் கலைகளுக்கு செல்வத்தர்கள் மட்டுமன்றி திருச்சபையினரும், பாப்பாண்டவர்களும் உதவினர். குறிப்பாக மெடிசி போன்ற செல்வந்தர்டகளைக் குறிப்பிடலாம். அதேவேளை பாப்பரசர் 5ம் நிக்கலஸ் வத்திக்கானில் ஓர் நூல் நிலையம் ஒன்றையும் நிறுவினார். இது தவிர 10ம் லியோ, 6ம் ஆலெக்ஸான்டர், 2ம் யூலியஸ் போன்ற பாப்பரசர்களும் கலைஞர்களுக்கு ஆதரவு வழங்கியமை மறுமலர்ச்சி ஏற்பட வாய்ப்பானது.
திருச்சபையானது மனித உடலும், இந்தப் பூமியும் ஆதாமின் சாபத்துக்கு உட்பட்டவை கிறிஸ்தவர் அவற்றை எதிர்க்க வேண்டும் என திருச்சபை பிரச்சாரம் மேற்கொண்டாலும் இத்தாலியில் வாழ்ந்த நகர வாசிகளிடையே காணப்பட்ட உலகியல் ஈடுபாடு காரனமாக உலகியல் சார்ந்த கல்வி முறையையும் கலையையும் அவர்கள் ஆதரிக்க முன்வந்தமையும் இத்தாலியில் மறுமலர்ச்சித் தோன்ற ஏதுவாகிய பிறிதொரு காரணம் எனலாம்.
அக்காலத்தில் இத்தாலியின் அயலில் இருந்த ஏனைய மேற்கு ஐரோப்பிய நாடுகளினை விட இத்தாலியானது ஒரு முற்போக்கான நாடாக காணப்பட்டது. குறிப்பாக இத்தாலிக்கு மேற்கிலும் வடக்கிலும் இருந்த பிற்போக்கான நாடுகளான ஸ்பானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் இருந்தன. இவ் நாடுகள் மத்தியில் உரோமானிய காலத்திலும் மத்தியகாலத்திலும் இத்தாலி நன்கு வளர்ச்சியடைந்த நாகரிகத்தையும் சனத்தொகையையும் கொண்ட ஒரு நாடாக விளங்கியது. எனவே இத்தாலியருக்கு ஏனைய நாடுகளுக்குச் செல்லவும், தமது பொருளாதாரத்தையும் விருத்தி செய்யவும் வாய்ப்புக் கிடைத்தபோது இத்தாலியில் முதலில் மறுமலர்ச்சி ஏற்படுவது சாத்தியமாயிற்று.
மேற்கு ஐரோப்பாவின் ஏனைய நாடுகளை விட இத்தாலியில் பழைய உரோமப் பண்பாடுகள் அழிவுறாது இருந்தது. உரேமப் பேரரசு காலத்தில் வளர்ந்திருந்த பல்வேறு நகரங்கள் உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் வீழ்ச்சியுற்றபோதிலும் மீண்டும் எழுச்சிபெறுவதற்கான வாய்ப்புக்களைப் பெற்றதும் மீண்டும் அங்கு பழைய ரோமானிய மரபுகள் புத்தெழுச்சி பெற உதவின. இதனால் இலத்தின் மொழியும் இலங்கியங்களும் இத்தாலியில் மீண்டும் பரவுவது இலகுவாக இருந்தது.
மத்திய காலத்தில் திருச்சபை குருமாருக்கு பயிற்சியளிக்க மடாலயங்களும் தேவாலயப் பாடசாலைகளும் நிறுவப்பட்டன. பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சமயம் சார்பான கல்விமுறை சர்வகலாசாலை முறையாக மாறிற்று. இங்கு இலத்தீன் மொழிக்கு முக்கியம் அளிக்கப்பட்டதுடன் இறையியல் மெய்யியல் சட்டம் போன்ற பாட நெறிகளுக்கு மேலதிகமாகபண்டைய இலக்கியம் வரலாறு நாடகம் போன்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இத்தாலியில் காணப்பட்ட பொலஞ்ஞோ, பாதுவா போன்ற குறிப்பிடத்தக்கனவாய் இருந்தன. இப்பல்கலைக் கழகங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கு ஐரோப்பாவில் வேறு எந்த நாடுகளிலும் காணப்படாத அளவிற்கு உருவாகிய புலமைவாதமும் இத்தாலியில் மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு உதவியது. இக்கல்வி மறுமலர்ச்சி ஆல்ப்பஸ் மலையைத் தாண்டி இத்தாலிக்கு வெளியே செல்ல நீண்ட காலமெடுத்தது.
மானிட வாதத்தின் விருத்தியும் மறுமலர்ச்சி ஏற்படுவதில் கூடிய பங்கு வகித்தது எனலாம். மத்திய பாலத்தில் அனைத்து விடயங்களிலும் 'கடவுளே மேலானவர்' எனும் கருத்து முக்கியப்படுத்தப்பட்ட தெய்வீகக் கோட்பாடே பயன்படுத்தப்பட்டு வந்தபோதிலும் மறுமலர்ச்சி இயக்கமானது மானிடவாதத்தை முன்வைத்து தனிமனிதத்துவத்தை முக்கியப்படுத்தியது. முதலாவது மானிடவாதியாக விளங்கும் பெற்றாக் என்பவர் லத்தீன் மொழியை அடிப்படையாகக் கொண்டு பாடசாலை பாடத்திட்டத்தை திருத்துமாறு ஓர் இயக்கத்தை ஆரம்பித்ததுடன். தர்க்கமுறை வாழ்வுக்கு உகந்த நல்லறிவைப் பெறும் நேக்கங்களோடு பயில வேண்டும் எனக் கூறினார். இதனால் உலகியல் மற்றும் தர்க்கவியல் துறைகள் வளர்ந்ததுடன், சுதந்திர சிந்தனையின் வளர்ச்சிக்கு அடித்தளமிடப்பட்டமை இத்தாலிய மறுமலர்ச்சிக்கு வாய்ப்பானது.
அக்கால புலவர்கள் கிறிஸ்தவக் கல்வியே சிறந்தது என வலியுறுத்தியதுடன் துறவு நெறியையே பெரிதும் வலியுறுத்தியதால் பண்டைய உலகியல் நூல்களின் கருத்துக்களை நுணுகி ஆராயவில்லை ஆனால் பெற்றாக் வேர்ஜில், ஹெரேஸ், லிவி, சிசரோ போன்ற இலத்தீன் புலவர்களின் கருத்துக்கள் உலகியல் சார்போடு விளக்கியதுடன் அவற்றை பாதுகாப்பதற்கான நூல் நிலையங்களையும் ஏற்படுத்தினார். இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட நூல்நிலையங்களும் மறுமலர்ச்சி ஏற்படக் காரணமாகியது
வெளிக்காரணம்.
கொன்தாந்தி நோபில் கைப்பற்றப்பட்டமை:
மறுமலர்ச்சியின் விளைவுகள்
இத்தாலியில் உருவான மறுமலர்ச்சியானது ஐரோப்பாவில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. இதனால் மேற்கைரோப்பிய வரலாறானது மத்திய காலத்திலிருந்து நவீன காலத்திற்கு மாறுவதற்கான ஒரு திருப்பு முனையான காலகட்டமாக மறுமலர்ச்சிக் காலகட்டம் விளங்கியது. எனவே அவ்வாறு மறுமலர்ச்சியினால் ஏற்பட்ட விளைவுகளை அடுத்து நோக்கலாம்.
1. நிலமானிய முறை வீழ்ச்சியடைந்து நகரங்களும் நகர நாகரிகங்களும் முன்னேற்றமடைங்தமை - இத்தாலியில் மறுமலர்ச்சி ஏற்டபட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த புராதான நகர பண்பாடானது புத்தெழுர்ச்சி பெற்று முன்னேறத் தொடங்கியது. இதனால் மிலான், ஜெனோவா, பாடுவா, வெனீஸ், புளோரன்ஸ் போன்ற நகரங்கள் முன்னேற்றமடைந்ததுடன் அங்கு வாழ்ந்த மக்களும் தமது பழைய கலாசாரத்தை மீட்டெடுத்துக் கொண்டனர். இதன்காரணமாக இவை ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது. இதனால் மத்திய காலத்து நிலமானிய முறையானது வீழ்ச்சியடைந்து நகரங்கள் முன்னேற ஆரம்பித்தன.
2. நகரங்களில் வாழ்ந்த செல்வந்த வகுப்பினரால் பிரபுத்துவ சமுக அமைப்பு விழ்ச்சியடையத் தொடங்கியது. - இச் செல்வந்த வகுப்பினர் தமது வர்த்தக முயற்சிகளின் வெற்றிக்கு மத்தியமயப்படுத்தப்பட்ட அதிகாரம் கொண்ட அரசனின் உதவியை நாடியதுடன். அரசருக்கு பண உதவிகளையும் வழங்கினர். அதே வேளை இச் செல்வந்த வகுப்பார் கலைகளின் வளர்ச்சிக்கு அனுசரனையும் வளங்கினர். அத்தகைய நிலையானது மானிய முறைச் சமுகத்திலிருந்து மாறுபாடு கொண்ட ஒரு சமுதாயம் உருவாவதில் பங்களிப்புச் செய்தது.
3. மறுமலர்ச்சியின் விளைவினால் முதலாளித்துவத்திற்குத் தேவையான பொருளாதார அமைப்புக்கள் தோற்றம் பெற்றன.- மத்திய காலமானது சேவைமானிய முறையிலிருந்து விடுபட்டு வர்த்தக பொருளாதார முறைகளினது தோற்றத்திற்கு வழிவகுத்தமையினால் அதனோடு சார்ந்த பொருளாதார அமைப்புகளும் வளரத் தொடங்கின. குறிப்பாக சில குடும்பங்கள் தனியே வர்த்தகக் கம்பனிகளையும், வங்கிகளையும் நிறுவி செயற்படத் தொடங்கினர். சான்றாக மெடிசி குடும்பத்தினரைக் குறிப்பிடலாம்.
4. தேசிய மொழிகள் முக்கியம் பெற்றன.– பண்டைய கிரேக்க உரோமானிய இலக்கியங்களும் அம் அமாழி தொடர்பான அறிவும் புத்துயிர்ப்புப் பெற்றமையானது மறுமலர்ச்சியின் ஒரு முக்கிய விளைவாகக் காணப்பட்ட போதிலும் மறுமலர்ச்சிக் காலத்தின் போது சில பிரதேச மொழிகளும் வளர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டமையும் ஒரு முக்கிய பண்பாக இருந்ததெனலாம். குறிப்பாக இத்தாலி (தாந்தே தனது நூலினை இத்தாலியில் எழுதினார்), ஆங்கிலம் (வில்லியம் ஷேக்ஸ்பியர் தமது இலக்கியத்தை ஆங்கிலத்தில் படைத்தார்), ஜெர்மன் (மார்ட்டின் லூதர் விவிலியத்தை ஜெர்மனியில் மொழிபெயர்த்தார்), ஸ்பானிய மொழிகள் முக்கியம் பெறத் தொடங்கின
5. கல்விமான்கள் தோன்றினர்.– மத்திய காலத்தில் சுதங்திரமான சிந்தனையின் விருத்திக்கு இடமளிக்கப்படாமையாலும் இறையியல் கல்வி மட்டுமே கிறிஸ்தவ குருமாருக்கு வழங்கப்பட்மையாலும் கல்வி விருத்தி அடையாத நிலை காணப்பட்டது. ஆயினும் இத்தாலியில் மானுடவாதத்தின் வளர்ச்சி, பல்கலைக் கழகங்கள் இத்தாலியிலும் ஏனைய மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் தோன்றியதைத் தொடர்ந்து பல்வேறு கல்விமான்கள் உருவாயினர். இவர்களது சிந்தனைகள் பிற்கால ஐரோப்பாவின் வரலாற்றினை முழுவதுமாக மாற்றியமைத்தது. குறிப்பாக பெற்றாக் எனும் அறிஞரின் பணிகளைக் குறிப்பிடலாம்.
6. மானிடவாதம் விருத்தியடைந்தமை மறுமலர்ச்சியின் முக்கிய விளைவுகளில் ஒன்றாகும்.
7. பரலோகப் போக்குடைய அறிவு லௌகீகத் தன்மையுடையதாக மாறியது.– மத்திய காலத்தில் கடவுளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையான வாழ்க்கை முறையும் கல்வி முறையும், கலைகளுமே காணப்பட்டன அதனால் ஐரோப்பாவின் வாழ்க்கை முறையானது பெரிய வளர்ச்சிகள் எதனையும் அடையவில்லை. ஆயினும் மானிடவாதம் விருத்தியடைந்தமையினால் பரலோகப் போக்குடைய அறிவு லௌகீகத் தன்மையுடையதாக மாறியது.
8. உலகியல் சார்ந்த கலைகளின் வளர்ச்சி– மத்திய காலத்தின் நிலமானிய சமுகத்தில் கலைகள் வளர்ச்சியடைவதற்கு ஏதுவான நிலை காணப்படவில்லை. ஆயினும் மறுமலர்ச்சிக் காலத்தில் தோன்றிய செல்வந்தர்கள் கலைகளை ரசிப்பதிலும் கலைஞர்களுக்கு உதவுவதிலும் ஆர்வம் கொண்டவர்களாய் இருந்தமையினால் உலகியல் சார்ந்த கலைகள் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. இவை இயற்கையை நேசிப்பதாகவும் மனித வாழ்வுக்கு முக்கியமளிப்பதாகவும் காணப்பட்டன. ஆயினும் இக்காலத்திலும் கிறிஸ்தவத்தை பிரதிபலிக்கும் கலைகள் முற்றாகக் கைவிடப்படவில்லை என்பதும் ஒரு முக்கிய அம்சம் எனலாம். இக்காலத்தில் வாழ்ந்த கலைஞர்களுக்கு சான்றாக லியனாடீடா டாவின்சி, மைக்கல் ஆஞ்சலோ, ரபேல் போன்றோரைக் குறிப்பிடலாம்.
9. புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் உண்டானமை. – மறுமலர்ச்சிக் காலத்தில் ஏற்பட்ட அறிவு விருத்தியின் காரணமாக இயற்கையை கூர்ந்து நோக்கும் போக்கும் மூட நம்பிக்கைகளை மறுதலிக்கும் போக்கும் ஆரம்பித்ததுடன் மக்களின் படைப்புத் திறனும் அதிகரித்தது. இதனால் மறுமலர்ச்சிக் காலத்தில் விஞ்ஞானத் துறையில் பல்வேறு கண்டுபிடிப்புக்கள் வெளிப்படத் தொடங்கின. பிரான்சிஸ் பேக்கன், கொப்பநிக்கல்ஸ், கேப்லர், கலிலியோ கலிலி, நியூட்டன், வில்லியம் ஹர்வே, பராசெல்ஸ் போன்றோர் மறுமலர்ச்சிக் கால விஞ்ஞானிகளுள் குறிப்பிடத்தக்க சிலராவர் இக்கால விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக்கள் பிற்பட்டகால ஐரோப்பிய மக்களின் சமூகப் பொருளாதார அரசியல் வாழ்வின் விருத்திக்கு பல்வேறு விதத்தில் உதவியது.
10. முடியாட்சிகள் பலம் பெறத் தொடங்கின. – மத்திய காலத்தில் பிரபுக்கள் அரசனை விட பலம் பெற்று காணப்பட்டுக் காணப்பட்ட போதிலும் மத்திய காலத்தில் நகரங்கள் எழுச்சி பெற்றதைத் தொடர்ந்து மானிய முறை முடிவுக்கு வந்தமையின் காரணமாக அரசர்கள் பலம் பெறத் தொடங்கினர். இவ்வரசுகளில் பிரபுத்துவ வகுப்பினர் பெற்ற இடத்தினை வர்த்தகத்தில் முன்னேறிய வகுப்பார் பெற்றுக் கொண்டனர்.
11. தேசிய உணர்வு விருத்தி – மறுமலர்ச்சியினால் ஏற்பட்;ட வியாபார முன்னேற்றம், அரசுகளின் முன்னேற்றம், புதிய நிலப்பரப்புக்கள் கண்டுபிடிக்கப்படுதல் என்பவற்றின் காரணமாக அரசர்களின் பலம் அதிகரித்ததைத் தொடர்ந்தும், புகழ் பெற்ற எழுத்தாளர்களின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட மக்களிடையே தேசியவாத உணர்வு விருத்தியடைந்தது. இத்தேசியவாத உணர்வானது மொழி, சமயம், பழக்கவழக்கங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவானது. ஸ்பானியா, போத்துக்கல், இங்கிலாந்து போன்றன அவ்வாறு உருவான சில தேசிய அரசுகளாகும்.
12. சமயத் துறையிலும் மறுமலர்ச்சி ஏற்படுவதற்கான சமய மறுமலர்ச்சி இயக்கம் தோன்றியது. – மறுமலர்ச்சியினால் ஏற்பட்ட பகுத்தறிவின் வளர்ச்சியின் காரணமாக சமயம் தொடர்பான மக்களின் கண்ணோட்டத்தில் பாரிய மாற்றம் ஒன்று ஏற்பட ஆரம்பித்தது தெனால் 16ம் நூற்றாண்டில் சமய சீர்திருத்த இயக்கம் ஒன்று தோன்றியது.
13. நாடுகாண் பயணங்கள். – மறுமலர்ச்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய கண்டுபிடிப்புக்கள் மக்களது அறிவில் ஏற்பட்ட மாற்றம் என்பன புதிய தேசங்களை கண்டுபிடிப்பதற்கான உந்துதலை அளித்தன.
போத்துக்கல்.
கடற் பயணங்களை மேற்கொள்வதில் முன்னிலையில் இருந்த நாடு போத்துக்கல்லாகும். 15ம் நூற்றாண்டில் போத்துக்கல் நாட்டரசனின் தம்பியான இளவரசர் ஹென்றி ஆபிரிக்காவின் கடற்கரையை ஆராய முற்பட்டார் இவர் அவ்வாறு செயற்படக் காரணம் ஆபிரிக்காவில் வாழ்ந்த புறச் சமயத்தவரை கிறிஸ்தவத்துக்கு மாற்றல், ஆபிரிக்கா மூலமாக வாசனைப் பொருட்களுக்கும் விலையுயர்ந்த திரவியங்களுக்கும் பேர்போன இந்தியாவுக்கு செல்லலாம் என்ற தொலமியின் கருத்துக்களுமாகும்.
ஹென்றி முதலில் அஸோர்ஸ் நாடுகளையும், மதீராத் தீவுகளையும் கண்டுபிடித்தார். இக்காலக் கப்பல்கள் சிறியனவாய் இருந்தமை பெரும் சவாலாய் அமைந்தது. இவர் மாலுமிகளுக்கான ஒரு பாடசாலையை அமைத்தது அதன் மூலமாக மாலுமிகளுக்கு பயிற்சியளித்தார் அங்கு மாலுமிகளுக்கு திசைகாட்டும் கருவி, துருவ நட்சத்திரங்களின் தூரத்தை அளவிடக்கூடிய ஆஸ்ட்ரோலேப் போன்ற கருவிகளை பயன்படுத்தும் முறையும் கற்பிக்கப்பட்டது.
இத்தகைய முயற்சிகளின் பின்னர் ஹென்றி அரசன் 1460 இறந்த பின்னரும் போத்துக்கேயர் நாடுகாண் பயணங்களைத் தொடர்ந்தனர். இதன்பயனாக 1486 ல் ஆபிரிக்காவின் தென்முனையை அடைந்த பார்த்தலோமியுடயஸ் அங்கு புயல் அதிகமாகக் காணப்பட்டதால் அவ்விடத்திற்கு புயல் முனை எனப் பெயரிட்டு போத்துக்கல்லுக்குத் திரும்பினான். அவ்முனை பின்னர் மேற்கொள்ளப்போகும் பயனங்களுக்கான ஒரு நம்பிக்கையை அளித்ததால் போத்துக்கல் அரசன் அதற்கு நன்னம்பிக்கை முனை எனப் பெயரிட்டான்.
1497ல் வாஸ்கொடகாமா என்பவன் அம்முனையைத் தாண்டி ஆபிரிக்காவின் கிழக்குப் பகுதியை அடைந்தான். பின்னர் அப்பகுதியிலிருந்து தென்மேற் பருவக்காற்றின் உதவியுடன் இந்தியாவின் மேற்குக் கரையிலுள்ள கள்ளிக்கோட்டையை அடைந்தான்.
1500ல் கப்றால் எனும் போத்துக்கேய மாலுமி தென்னமேரிக்காவிலுள்ள பிரேசில் என்ற பகுதியை அடைந்தான்.
ஸ்பெயின்.
ஸ்பெயின் அரசனான பேர்டினன் அரசி இஸபெல்லா என்போர் ஜெனோவா நகரத்தைச் சேர்ந்த கிறிஸ்தோபர் கொலம்பஸ் என்பவன் கடற்பயணங்களை மேற்கொள்வதற்கு உதவினான. கொலம்பஸ் 1492ஆகஸ்ட் 3ல் அத்திலாந்திக் சமுத்திரத்தின் வழியாக இந்தியாவை அடைய பயணத்தை ஆரம்பித்தான். ஒக்டோபர் 12ல் பஹாமாஸ் தீவை அடைந்தார். தான் கண்டுபிடித்த பகுதி இந்தியா என்றே அவர் நம்பினார். நான்காவது முறை பயணம் செய்யும் போதே அமெரிப்பாவைக் கண்டுபிடித்தார்.
1519ல் ஸ்பானிய சேவையிலிருந்த மகலன் எனும் போத்துக்கேய மாலுமி அமெரிக்காவின் தென் முனையைக் கடந்து ஆசியாவுக்கு போக முயன்றான். தென்னமெரிக்க தென்முனையிலுள்ள 373 மைல் நீரினையைக் கடந்து (மகலன் நீரினை) கடந்து பசுபிக் சமுத்திரத்தில் முதன் முதலில் பயணித்த முதலாவது ஐரோப்பியரானான். முதலில் உலகைச் சுற்றியவரும் இவரே ஆவார். இப்பயனத்தில் 1521 மார்ச் 6ம் நாள் மகலனால் பிலிப்பைன்ஸ் தீவுகள் கண்டறியப்பட்டதைத் தொடந்து ஆசியாவில் ஸ்பானிய குடியேற்றம் ஒன்று ஏற்படுத்தப்படுவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டது.
மேலும் சில குடியேற்றங்களும் ஸ்பானியரால் அமைக்கப்பட்டன.
1501ல் அமெரிக்கோ வெஸ்புசி எனும் இத்தாலியர் கொலம்பஸ் ஏற்கனவே கண்டுபிடித்த அமெரிக்காவை கண்டறிந்ததுடன் அவ்விடத்தையும் மக்களையும் ஆராய்த்து நீண்ட குறிப்பை எழுதினார். அவரே கோலம்பஸ் கண்டுபிடித்தது இந்தியா அல்ல புதிய கண்டம் என்ற முடிவுக்கு வந்தார்.
கோட்டேஸ் ஃ கோர்டீஸ் எனும் சாகசக் காரரால் மெக்சிகோ வெற்றிகொள்ளப்பட்டு அங்கு ஸ்பானிய குடியேற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
பிரான்சிஸ் பிஸாரோவினால் பேரு 1530ல் வெற்றிகொள்ளப்பட்டது.
இவ்விடங்களில் காணப்பட்ட வெள்ளி தங்கம் முதலியன வேறு ஸ்பானியாவுக்குக்கொண்டுசெல்லப்படடது.
இங்கிலாந்து
இங்கிலாந்து மன்னன் 7ம் ஹென்றியின் சேவையிலிருந்த வெனீசைச் சேர்ந்த ஜோன் கபோட் என்பவன் அம்மன்னனின் உதவியுடன் பயணத்தை ஆரம்பித்து நியூபவுண்லாந்தை அடைந்தான். தனது இரண்டாவது பயணத்தின் போது வட அமெரிக்காவை ஆய்வு செய்தார். இந்தப் பயணங்களே இங்கிலாந்து அமெரிக்காவில் குடிNயுற்றங்களை அமைக்க வாய்ப்பானது.
பிரான்ஸ்
1534ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜேக்கஸ் காட்டியர் வட அமெரிக்கா சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். புனித லோரன்ஸ் ஆற்றின் வழியான பயணித்த அவர் அங்கு செவ்விந்தியர்களைக் கண்டார். அப்பகுதிக்கு கனடா எனப் பெயரிட்டார்.
Comments
Post a Comment