Skip to main content


 ரஷ்ய புரட்சி

மனிதகுலமானது பல்வேறு புரட்சிகளையும் போராட்டங்களையும் தாண்டி வளர்ந்துள்ளது. இவற்றுள் பல புரட்சிகள் சமூக அமைப்பினையும் அரச அமைப்பினையும் முற்றாக மாற்றிப்போட்டன. அத்தகைய புரட்சிகளுள் ரஷ்யப்புரட்சியானது முக்கியத்துவமிக்கதோர் புரட்சியாகும். இப்புரட்சியானது ஏனைய புரட்சிகளிலிருந்து வேறுபடக் காரணம் கால்மாக்சினது பொதுவுடமைச் சித்தாந்தத்திற்கு செயலுருக்கொடுத்த புரட்சி இது என்பதனாலாகும். புரட்சியின் பயனாக சோவியத் குடியரசுகளின் கூட்டமைப்பு தாபிக்கப்பட்டு 1991 வரை நீடித்தது.

இப்புரட்சியினது போக்கினைத் தீர்மானித்தோருள் விவசாயிகள் வர்க்கம் முக்கியம் பெற்றதுடன் தொழிலாளர்களும் இராணுவ வீரரும் இப் புரட்சியின் வெற்றிக்குக் காரணமாய் அமைந்தனரெனலாம். இவர்களின் பிரதான கோரிக்கையாக காணி, உணவு, சமாதானம் என்பது அமைந்தது. 


புரட்சி ஏற்பட்ட விதம்

புரட்சி ஏற்பட்ட காலத்தில் சார் மன்னர்களின் ஏகாதிபத்திய ஆட்சியானது நிலவியது, இவர்கள் பல்வேறு யுத்தங்களில் பங்கேற்றனர். கிறிமிய யுத்தம், ரஷ்ய – துருக்கி யுத்தம், ரஷ்ய – யப்பான் யுத்தம், உலக யுத்தம் போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்கனவாகும். ரஷ்யா சனத்தொகையில் பெரிய நாடாக காணப்பட்ட போதிலும் ரஷ்ய – துருக்கி யுத்தங்களை விட ஏனைய யுத்தங்கள் யாவற்றிலும் ரஷ்யாவானது தோல்வியினையே அடைந்தது. இத்தகைய தோல்விகளுக்கு முக்கிய காரணம் ரஷ்யாவிடம் போதிய ஆயுதங்களும் அதனைக் கொண்டு செல்லக்கூடிய வசதிகளும் காணப்படாமையாகும். இவ்வாறான தொடர் தோல்விகள் மக்கள் மத்தியில் மன்னர் மீதான அதிருப்தி அதிகரிக்கக் காரணமானதுடன், மக்கள் மத்தியில் தேசிய உணர்வினையும் தூண்டுவதற்குக் காரணமாக அமைந்தது. 

இந்த அதிருப்தியானது 1904 – 1905 காலப்பகுதியில் சிறிய நாடான யப்பானுடன் ஏற்பட்ட யுத்தத்தில் ரஷ்யா தோல்வியடைந்ததன் பின்னர் உடனடியாக வெளிப்படத் தொடங்கியது. அதன் விளைவே 1905ல் ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சியாகும். ஆயினும் இப்புரட்சியானது மிகவும் கடுமையான முறையில் சார் மன்னன் இரண்டாம் நிக்கலஸால் அடக்கப்பட்டது. இவன் புரட்சியை அடக்கினாலும் மக்களிடத்திலிருந்த அதிருப்தியை நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை என்பதே உண்மை. 


1917 மார்ச் புரட்சி

அத்தகைய நிலையிலேயே 1ம் உலகயுத்தத்தில் ரஷ்யா அடைந்த தோல்விகளைத் தொடர்ந்து மீண்டுமொருமுறை மக்கள் புரட்சி ஏற்படுவதற்கான நிலை உண்டானது. நீண்ட காலம் நீடித்த போரினால் நாட்டில் விவசாயம் பாதிக்கப்பட்டமை, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமை, என்பவையும் மக்களிடத்தில் ஆட்சிக்கு எதிரான நிலையினை ஏற்படுத்தியது. இந்நிலையில் மக்கள் தனி முடியாட்சியினை இல்லாதொழிக்க ஒன்றுபட்டனர். இதன் முதற்கட்டமாக உணவினைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வீதியில் காத்து நிற்கவேண்டியேற்பட்டமை தொழில் நிறுத்தங்களுக்கும் குழப்பங்களுக்கும் காரணமாகியது. ஆரம்பத்தில் இப்போராட்டத்தில் பெற்றோக்கிராத்தில் உள்ள நெசவாலைகளில் தொழில் செய்த பெண் தொழிலாளர்களே 'உணவு வேண்டும்' என்ற கோஷத்துடன் போராட்டத்தில் குதித்தனர். உணவுக்கான அவர்களது கோஷத்துடன் 'போர் ஒழிக', 'தனியாட்சி ஒழிக' எனும் விவசாயிகளினதும் தொழிலாளர்களதும் கோசங்களும் இணைந்து கொண்டன. முன்றாவது நாள் இத்திடீர் வேலைநிறுத்தமானது பாரிய கிளர்ச்சியாக மாறி புரட்சித் தன்மைகளை வெளிப்படுத்தியது. ஆரம்பத்தில் நடுநிலை வகித்த படையினரும் இப்போராட்டங்களில் இணைந்து கொண்டனர். 

புரட்சி உச்சமடைந்து இரண்டாம் நிக்கலஸை நெருக்குதலுக்கு உற்படுத்தியமையால் அவன் மார்ச் 15ல் சிம்மாசனத்தைத் துறந்தான். முடியாட்சி ஒழிக்கப்பட்டது. அதிகாரத்ததைக் கைப்பற்றிய விவசாயிகளும் தொழிலாளர்களும் ஆட்சியைக் கொண்டு நடத்தக்கூடிய பலமின்மையால் மத்திய வகுப்பாரிடம் ஆட்சியை ஒப்படைத்தனர், புதிய அரசாங்கம் உருவானது. இவ்வாறு  அமைக்கப்பட்ட மென்ஸ்விக் அரசாங்கம் கெரென்சியை யுத்த மந்திரியாக தெரிவு செய்து யுத்தத்தை மீண்டும் நடத்த ஆரம்பித்தது. மீண்டும் ரஷ்யா யுத்தத்தில் தோல்விகளையே சந்தித்தமையால் மக்கள் எதிர்ப்பு மீண்டும் அதிகரித்தது.


1917 அக்டோபர் புரட்சி

புரட்சியின் பின்னர் அமைக்கப்பட்ட அரசாங்கம் தமது கோரிக்கைகளான அமைதி ஏற்படுத்துதல், விவசாயிகளுக்கே நிலத்தை உடைமையாக்குதல், தொழிற்சாலைகளை தொழிலாளர் கட்டுப்பாட்டில் கொண்டுவரல், ரஷ்யர் அல்லாத மக்களுக்கும் சம அந்தஸ்து வழங்குதல் என்பன நிறைவேற்றும் என எதிர்பார்த்திருந்த விவசாயிகளினதும் தொழிலாளர்களினதும் எதிர்பார்ப்புக்கு மாறாக அரசாங்கம் நடந்து கொண்டது. மீண்டும் யுத்தத்தினை ஆரம்பித்தமை மக்கள் எழுர்ச்சி மீண்டும் அதிகரிக்கக் காரணமானது. இத்தகைய நிலையில் விவசாயிகளும், தொழிலாளர்களும் தாமாகவே முன்வந்து மத்திய வகுப்பாரின் மென்ஸ்விக் அதிகாரத்தை ஒழிக்க முயன்றனர். விவசாயிகள் பிரபுக்களின் நிலங்களை எரித்தும் கொள்ளையடித்தும் அரண்மனைகளை எரித்தும், முதலாளிகளைக் கொன்றும் கிளர்ச்சிகளில் ஈடுபட ஆரம்பித்தனர். 

மார்ச் புரட்சியின்போது சுவிட்சர்லாந்திலிருந்த லெனின், தற்காலிக அரசாங்கத்தின் ஆட்சியில் தனது மறைவான வெளிநாட்டு வாழ்க்கையினை முடித்துக்கொண்டு ரஷ்யாவுக்குத் திரும்பி போல்ஸ்விக் கட்சியின் தலைமையைப் பெற்றுக் கொண்டார். போல்ஸ்விக் கட்சியினர் மக்களுக்கு உணவு, நிலம், சமாதானம் பெற்றுத்தருவதாகக் கூறி தம் பிரச்சாரத்தினை ஆரம்பித்தனர். இதனால் போல்ஷ்விக்குகளுக்கு, அரசாங்கத்தின் செயற்பாடுகளால் ஏமாற்றமுற்ற விவசாயிகள், தொழிலாளர்கள், இராணுவ வீரர்கள் போன்றோரின் ஆதரவு கிடைக்கப்பெற்றது.

லெனின் தலைமையில் ட்ரொஸ்கி விவசாயிகள், தொழிலாளர்களைக் கொண்ட இராணுவப் புரட்சிக் குழுவினை அமைத்து அரச நிறுவனங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். மத்தியதர வகுப்பாரும் இராணுவத்தினரும் இப்புரட்சிக்கு எதிர்ப்புக்காட்டாமையால் புரட்சி வெற்றிபெற்றது. இதுவே அக்டோபர் புரட்சி எனப்பட்டது. இதக் பின்னர் விவசாயிகளினதும் தொழிலாளர்களினதும் பிரதிநிதிகளைக் கொண்ட 'சோவியத் சபையின்' ஆட்சி ரஷ்யாவில் தாபிக்கப்பட்டது. 

இத்தகைய நிலையில் புதிய சோவியத் அரசில் உள்நாட்டுப்போர் தோன்றியது. நிலத்தை இழந்த பிரபுக்களும் சார் மன்னரின் ஆதரவு வீரர்களும் இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நேச தேச ஆதரவுடன் சண்டையை ஆரம்பித்தனர். 1920 வரை இவ் உள்நாட்டுப்போர் நீடித்தது. இது புதிய அரசின் செஞ்சேனைப் படைகளால் அடக்கப்பட்டது. 

உலகம்; முழுவதும் பொதுவுடைமையைப் பரப்புவதற்காக 'கொமின்டேன்' எனும் சர்வதேச பொதுவுடமைக் கட்சி 1919ல் ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும் 1924ல் லெனின் இறந்த பின்னர் 1924ல் கட்சியில் பிளவுகள் ஏற்பட ஆரம்பித்தன. ட்ரொஸ்கி உலகப்புரட்சியை நம்பினார் ஸ்டாலின் இப்புரட்சியை தனித்து நின்று ஏற்படுத்த முடியாது என்றார். இதுவே கட்சியில் பிளவுகள் ஏற்படக் காரணமாகியது. ஈற்றில் ஸ்டாலின் வெற்றி பெற்றதும் புதிய அரசாங்கமானது தேசியமயமாக்கம், தனியார் வியாபாரத் தடை, வங்கிகளுக்கு தடை, கூட்டுறவு விவசாயம் என்பவற்றை மேற்கொண்டது. 


புரட்சிக்கான காரணங்கள்

இவ்வாறாக ரஷ்யாவில் புரட்சி ஏற்படுவதில் அந்நாட்டின் அரசியல், சமூக, பொருளாதாரக் காரணிகள் செல்வாக்குச் செலுத்தின.

அரசியல் காரணிகள்

1) ஊழல் நிறைந்த ஏகாதிபத்திய மன்னராட்சி – தெய்வீக உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில், ஆட்சியினை நடத்துவதற்கு தாம் கடவுளால் தெரிவு செய்யப்பட்டதாக சார் மன்னன் 2ம் நிக்கலஸ் கருதினான். இதனால் அவனது ஆட்சியில் மக்கள் பற்றிக் கவனம் செலுத்தத் தவறினான். இவன்; மன்னருக்கு எதிராக மக்கள் நடத்திய கிளர்ச்சிகள் யாவற்றையும் மிகக் கொடுமையாக அடக்கினான். 1905 ஏற்பட்ட கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட விதம் இதற்குத்தக்க சான்றாகும். இக்கிளர்ச்சியின் பின்னர் மன்னன் டூமா எனும் பாராளுமன்றம் ஒன்றை உருவாக்கி மக்கள் பிரச்சினைகளை நீக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டாலும் டூமாவுக்கு உரிய அதிகாரங்களை வழங்காமையால் அது பெயரளவானதாகவே காணப்பட்டது.

2) மன்னன் மீது மக்கள் அதிருப்தியுற்றமை – மன்னன் நாட்டு விடயங்களைத் தவிர தன் குடும்ப விடயங்களிலேயே அதிக கவனம் செலுத்தியதுடன் தன் அரசின் கௌரவத்தை உயர்த்தும் வகையிலே பல்வேறு போர்களில் மக்களின் விருப்பத்துக்கு மாறாக ஈடுபட்டான். இதனால் மக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளானதுடன் நாட்டின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டதுடன் இதன் விளைவுகள் மன்னனை ஆட்சிக்குப் பொருத்தமற்றவனாகவும் செயற்றிறனற்றவனாகவும் காட்டியது.

3) 1905 ஜப்பான் யுத்தம், 1914 உலகயுத்தம் போன்றவற்றில் ரஷ்யா பெற்ற தோல்விகள் - ரஷ்யாவிடம் போதிய யுத்தத் தளபாடங்களும் நவீன யுத்தக் கருவிகளும் இல்லாமை, யுத்தத்திற்கு வேண்டிய பொருட்களை இராணுவத்துக்கு வழங்கக் கூடிய போக்குவரத்து வசதிகளின்மை போன்றவற்றால் ரஷ்யா மேற்படி யுத்தங்களில் தோல்வியைத் தழுவ வேண்டி ஏற்பட்டது. எனினும் தன் கௌரவத்தை பாதுகாக்க யுத்தம் செய்வதையே மன்னன் விரும்பினான். எனவே யுத்தங்களால் மக்கள் சலிப்புற்றமை கிளர்ச்சிகளுக்கு காரணமானது. 

4) 1905ல் ஏற்பட்ட வேலைநிறுத்தமும் அது கொடூரமான முறையில் அடக்கப்பட்டமையும் - 1904 – 1905 காலப்பகுதியில் ஜப்பானுக்கு எதிராக எற்பட்ட யுத்தத்தில் ரஷ்யா தோல்வியடைந்தமையானது மன்னனின் மீது அதிருப்பதி வெளிப்படுத்தப்படுவதற்கு வாய்ப்பானது. இதனால் மக்கள் வேலைநிறுத்தங்களிலும், கிளர்ச்சிகளிலும் ஈடுபட்டனர். குறிப்பாக சென் பீட்டர்ஸ்பேர்க்கில் சோவியத் எனும் தொழிலாளர் குழுவே கிளர்ச்சிகளை முன்னின்று நடத்தியது. இதனை மன்னன் கடுமையாக அடக்கினான். இக்கிளர்ச்சிக்காரர்கள் மாளிகையை நெருங்கும்போது காவலாளிகள் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டனர். 1905 ஜனவரி 22 ஞாயிற்றுக் கிழமை இந்நிகழ்வு நடந்ததால் இது 'குருதி ஞாயிறு' எனப்பட்டது.  

பொருளாதாரக் காரணிகள்

1) நிலமானிய பொருளாதாரம் - ரஷ்யாவில் விவசாயிகளே அதிக எண்ணிக்கையில் காணப்பட்டனர். அத்ததையதோர் சமூகத்தில் நிலப்பிரபுக்கள் உழைப்பினைச் சுரண்டிக் கொண்டனர். இதனால் விவசாயிகள் தமக்கென சொந்தமான நிலம் வேண்டும் என கோசமிட்டனர். இதனால் 1906ல் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்தின் மூலமாக பொது நிலங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டாலும் இவ்வாறு நிலத்தைப் பெற்ற விவசாயிகளும் மீண்டும் பொருள் படைத்தோராக மாறியமையால் தொடர்ந்தும் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலையே உண்டானது.

2) விவசாயம், கைத்தொழில் போன்றன ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட பின்னிலையில் காணப்பட்டமை - விவசாயம், கைத்தொழில் துறைகளில் புதிய விடயங்களும் தொழிநுட்பங்களும் பயன்படுத்தப்படாமையினால் பொருளாதாரத்தில் பின்னடைவை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டது. 

3) தொழிலின்மை, வறுமை போன்றன ஏற்பட்டமை – ரஷ்யா சனத்தொகை அதிகரித்துச் சென்ற அதேவேளை நகர்ப்பகுதிகளில் உருவான கைத்தொழில் சாலைகளும் நகர்ப்புற சனத்தொகையினை அதிகரித்தது. 1890 – 1910 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தலைநகர் சென் பீட்டர்ஸ் பேர்க்கில் 1,033,600 ஆக காணப்பட்ட சனத்தொகை 1,905,600 ஆக உயர்ந்தது. இத்திடீர் அதிகரிப்புக்கு ஏற்ப தொழில் வாய்ப்பினை அரசாங்கத்தால் உருவாக்க முடியாமை மக்களிடையே வறுமையினை ஏற்படுத்தியது. 

4) யுத்தினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி – ரஷ்யாவானது முதலாம் உலகயுத்தத்தில் நேச நாடுகளின் பக்கம் இணைந்திருந்தது. 1914ல் துருக்கியானது மத்திய ஐரோப்பிய வல்லரசுகளின் பக்கம் இணைந்து கொண்டதும் ரஷ்யாவினது வணிகப்பாதைகள் முடக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ரஷ்யாவை கடுமையாகப் பாதித்தது. இதிலிருந்து மீளும் வகையில் நாணயங்கள் புதிதாக அச்சிடப்பட்டமையால் 1917ல் பணவீக்கம் அதிகரித்தது. இதனால் பொருட்களுக்கு விலையுயர்வு ஏற்பட்டமை விவசாயிகளையும் தொழிலாளர்களையும் நடுத்தர வகுப்பாரையும் பாதித்தமையால் அவர்களை கிளர்ச்சிகளில் ஈடுபடத் தூண்டியது. 

5) திறைசேரி வெறுமையடைந்தமை – அரச வருமான மார்க்கங்கள் முடக்கப்பட்டமையாலும் அரசன் யுத்தத்துக்காக அதிக செலவினை மேற்கொண்டமையாலும் திறைசேரி காலியானது.

6) எழுபது ஆண்டுகளாக ரஷ்யா எதுவித அபிவிருத்தியும் இன்றி காணப்பட்டமையால் மக்களிடத்தில் ஏற்பட்ட எதிர்ப்புணர்வு.


சமூகக் காரணிகள்

1) பலம்வாய்ந்த மத்தியதர வகுப்பு காணப்படாமை – ஏனைய ஐரோப்பிய நாடுகளில் காணப்பட்ட மத்திய தர வகுப்பினைப் போல் ரஷ்யாவில் காணப்படவில்லை. இங்கு மத்தியதர வகுப்பாரை விடவும் விவசாயிகளின் வகுப்பே எண்ணிக்கையில் அதிகம் காணப்பட்டதுடன் இவர்களே பலம் பெற்றவர்களாகவும் விளங்கினர். மேலும் பிரான்சில் ஏற்பட்டவாறு மத்தியதர வகுப்பினர் விவசாயிகளின் நிலம் தொடர்பான பிரச்சினையை தீர்க்க முன்வரவில்லை. இந்நிலையில் இவர்களை மார்க்ஸிஷ கருத்துக்களின் அடிப்படையில் வழிநடத்திய லெனினால் இறுதியில் சோவியத்தின் ஆட்சியினை பிரகடனம் செய்ய முடிந்தது. 

2) தத்துவக் கருத்துக்களின் செல்வாக்கு - இக்கால ஐரோப்பாவிலும் ஐரோப்பாவுக்கு வெளியிலும் மார்க்ஸ், ஏங்கல்ஸ் போன்றோரின் கருத்துக்கள் வேகமாக பரவிக்கொண்டிருந்தது. தொழிலாளர்கள் புரட்சியின் மூலம் அரசியல் அதிகாரத்தைப் பெற்று சமூகச் சுரண்டல்கள் அற்ற அரசை உருவாக்குவர் என இவர்கள் வலியுறுத்தினர். இக்கருத்துக்களுக்கு செயலுருக் கொடுக்கும் வகையில் செயற்பட்ட லெனின், ட்ரொஸ்கி போன்ற தலைவர்களினதும் பொல்சுவிக் கட்சியினதும் முயற்சியால் பரவிக்கொண்ட தத்துவக் கருத்துக்கள் புரட்சிக்கு வழிவகுத்தது.

3) ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட ரஷ்யாவின் சமூக நிலையானது மிகவும் கீழ்மட்டத்தில் காணப்பட்டமை – உலக யுத்தத்தில் ஈடுபட்ட ஏனைய ஐரோப்பிய நாடுகளைவிட ரஷ்யா பாரிய இழப்புகளை சந்திக்க வேண்டி ஏற்பட்டது. பல்லாயிரக்கனக்கானோர் இறந்ததுடன், தொழிலாளரின் நிலையும் மிக மோசமாகவே காணப்பட்டது. சனத்தொகை அதிகரிப்பால் சென் பீட்டர்ஸ்பேர்க் குடியிருப்பு ஒன்றில் 16 பேரும் ஒரு அறையில் 6 பேரும் வாழ்ந்தனர். அத்துடன் சுத்தமான நீரின்மை, மனிதக்கழிவின் பெருக்கம் என்பவற்றால் மேலும் பலர் நோய்வாய்ப்பட்டு இறந்தனர்.

4) போல்சுவிக் கட்சி உருவானமை – ரஷ்யாவில் உருவான சோஷியல் ஜனநாயக கட்சியில் கொள்கை ரீதியில் ஏற்பட்ட பிளவானது மென்ஷ்விக்(சிறுபான்மை), போல்ஷ்விக்(பெரும்பான்மை) எனும் இருபிரிவினரை ஏற்படுத்தியது. பொல்சுவிக் கட்சியினர் மார்க்ஸிய கோட்பாடுகளின் அடிப்படையில் முதலாளித்துவ ஜனநாயகத்தை தீவிரமாக எதிர்த்தனர். விவசாயிகள், தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வறிய விவசாயிகளும், தொழிலாளர்களும் சேர்ந்து அமைக்கும் பொதுமக்கள் குடியரசே அவசியம் எனக் கூறி அவர்களைத் தம் வசப்படுத்தினர். அரசு சிதைவுறும்போது அதனைக் கைப்பற்றும் வகையில் தம்மைத் தயார் செய்தனர். இதனால் ரஷ்யாவின் சூழ்நிலைகளை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி தொழிலாளர் அரசாங்கம் ஒன்றினை அவர்களால் உருவாக்க முடிந்தது. புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஓர் பேரியக்கமாக போல்ஷ்விக் கட்சியை மாற்றியமைத்தவர் அதன் தலைவர் லெனின் ஆவார்,



விளைவுகள்

1) போல்சுவிக் கட்சியினர் ஆட்சியை தாபித்தமை: மென்ஷ்விக்கினரிடம் இருந்து போல்சுவிக் கட்சியினர் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டனர். இவர்கள் விவசாயிகளினதும் தொழிலாளர்களதும் பிரதிநிதிகளைக் கொண்ட சோவியத் சபையினது பொதுவுடமை ஆட்சியினைத் தாபித்துக் கொண்டனர். 

2) நாட்டில் சமாதானம் ஏற்படல்: போல்சுவிக் கட்சியினர் ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் முதலாம் உலகயுத்தத்தில் பங்கெடுப்பதை நிறுத்திக்கொண்டதுடன் ஜேர்மனியுடனும் 1918 மார்ச்சில் சமாதான உடன்படிக்கையினை கைச்சாத்திட்டனர். இதனால் நாட்டில் சமாதானம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் தோன்றின.

3) தனிப்பட்டவர்களின் சொத்துரிமையும், தனிப்பட்டவர்களின் நிலவுரிமைகள் நீக்கப்பட்டமை: வகுப்பு வித்தியாசம் இல்லாத ஒரு சமூகத்தினை உருவாக்கும் வகையில் செயற்பட்ட போல்சுவிக் கட்சியினர் பிரபுக்களிடத்திலும் மத்தியதர வர்க்கத்தினரிடத்திலும் காணப்பட்ட நிலங்களையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்தனர். 

4) தொழிற்சாலைகள் அரசுடைமையாக்கப்பட்டமை: 1936ல் வெளிவந்த சோவியத்தின் அரசியல் திட்டத்திற்கமைவாக போல்சுவிக் ஆட்சியாளர்கள் தொழிற்சாலைகள், உற்பத்திக் கருவிகள், நீர்ப்போக்குவரத்து, ரயில்பாதைகள், வங்கிகள், காப்புறுதிக்கம்பனிகள், சுரங்கங்கள், உள்ளிட்ட தனியார் வர்த்தக முயற்சிகள் யாவற்றினையும் அரசுடமையாக்கினர். அத்துடன் அந்நிய முதலீடுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

5) சமவுடைமை சோவியதின் உதயம்: சமவுடமை சோவியத் விவசாயிகளினதும் தொழிலாளர்களினதும் நாடென 1936ல் வெளிவந்த யாப்பு கூறியதுடன். இது 11 சமவுடமை அரசுகளைக் கொன்ட ஒரு சமஸ்டியாக விளங்கியது. இங்கு ஒரேயொரு கட்சியே செயற்பட்டது. 

6) அனைத்து தேசிய இனத்தவருக்கும் சுயநிர்ணய உரிமை உறுதிப்படுத்தப்பட்டது: இதனால் சோவியத் ரஷ்யாவில் தேசிய இனங்கள் தம்மைத்தாமே ஆளக்கூடிய நிலையைப் பெற்றன. இதுவே பின்னர் பிற நாடுகளில் தேசிய இனங்களின் சுயநிர்ணய கோரிக்கைக்கும் அடிப்படையாக அமைந்தது.

7) பொதுவுடைமை சித்தாந்தத்தின் பரவல்: உலகம் முழுதும் பொதுவுடமைக் கொள்கையினை பரப்பவதற்காக கொமின்டேன் எனும் சர்வதேச பொதுவுடமைக் கட்சி தாபிக்கப்பட்டது. இக்கட்சியால் உலகப்புரட்சியை ஏற்படுத்த முடியாது போனாலும் ரஷ்யாவின் முன்மாதிரிகளைப் பின்பற்றி ஏனைய நாடுகளும் பொதுவுடமை ஆட்சியினை தாபிக்க முயற்சித்தன. சான்றாக சீனா, கியூபா போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம்.

8) ரஷ்யா பலமிக்க நாடாக விரைவில் வளர்ச்சி பெற்றது – புரட்சியின் பின்னர் ரஷ்யாவானது வகுத்துக் கொண்ட ஐந்தாண்டு திட்டங்களின் பயனாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மூலமாக ரஷ்யா விரைவாக வளர்ச்சியடைந்தது. இரண்டாம் உலகப்போரின்போது ரஷ்யாவினது நிலை வெளிப்பட்டது.


தொகுப்பு: ம.நிஷாந்தன்


மேலதிக வாசிப்புக்குரிய நூல்கள்

ஐரோப்பிய வரலாறு - பேர்டினன்ட் செஷவில்

19ம், 20ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா - இ.இலிப்சன்

உலக சரித்திரம் - மு.இளையதம்பி


Comments

Popular posts from this blog

கைத்தொழில் புரட்சி

நவீன உலகினை வடிவமைத்த காரணிகளுள் பல்வேறு புரட்சிகளுக்கு முக்கிய பங்குண்டு. அவற்றுள் கைத்தொழிற் புரட்சியும் முக்கியமான ஒன்றாகும். இது அறிவியல் வளர்ச்சியினால் தொழிற்றுறையில் ஏற்பட்டதோர் விரைவான மாற்றமாகும். 1760 – 1830 வரையான காலத்தில் பிரித்தானியாவின் கைத்தொழிற் துறையில் இத்தகைய பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. கைகளால் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரியமான குடிசைக் கைத்தொழிலுக்கு மாற்றாக இயந்திரங்களின் உதவியுடன் பெரிய தொழிற்சாலைகளில் பாரிய கேள்வியினை பூர்த்தி செய்யும் வகையில் அதிகளவான பொருட்களை உற்பத்தி செய்யும் முறையினை குறிப்பதற்கே கைத்தொழில் புரட்சி எனும் பதமானது 18ம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்படுகிறது.

ஐரோப்பிய மறுமலர்ச்சியும் அதன் விளைவுகளும்

ஐரோப்பாவில் உரோமப் பேரரசின் விழ்ச்சிக்குப் பின்னரானகாலகட்டமானது மானிய முறையினை அடிப்படையாகக் கொண்டிருந்த சமூகப் பொருளாதார அரசியல் அம்சங்களினைக் கொண்டிருந்தது. இக்காலத்தில் மேற்படித் துறைகளில் மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை ஆயினும் கி.பி1300ம் ஆண்டிலிருந்து ஐரோப்பாவில் தோன்றிய ஒரு சீர்திருத்த இயக்கமானது செம்மொழிக் காலத்து இலக்கியம் கலை என்பவற்றை புனர்நிர்மாணம் செய்வதற்கு மேற்கொண்ட முயற்சியினால் கிரேக்க உரோம கலைகளை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பாவின் விஞ்ஞானம் கைத்தொழில் வர்த்தகம் அரசியல் போன்றனவும் புத்தெழுச்சி பெற ஆரம்பித்தன. இது ஐரோப்பாவில் 1500 வரையிலும் நீடித்தது. சில ஐரோப்பிய நாடுகளில் 1550ல் இருந்து 1600 வரைக்கும் நீடித்திருந்தது. இக்காலத்தையே மறுமலர்ச்சிக் காலம் என்கின்றனர்.

ஐரோப்பாவில் ஏற்பட்ட சமய சீர்திருத்தமும் எதிர் சமய சீர்திருத்தங்களும்

ஐரோப்பாவின் நாகரிக வளர்ச்சிக்கு கிறிஸ்தவ சமயமும் கிறிஸ்தவ திருச்சபையும் பெரிதும் உதவியது. இதனால் மத்திய காலத்தில் ஐரோப்பாவில் கிறிஸ்தவ சமயம் செல்வாக்குப்பெற்றதொரு சமயமாக விளங்கினாலும் 15ம் நூற்றாண்டு காலத்தில் 6ம் அலெக்சாந்தர்> 2ம் ஜூலியஸ்> 10ம் லியோ போன்ற பாப்பரசர்களும் கிறிஸ்தவ குருமாரும் உலகியல் நாட்டத்தோடு நடத்திய வாழ்க்கை> இதனால் திருச்சபையானது நிலமானிய முறையில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய தாபனமாக மாற்றமுற்றமை> இவற்றை எதிர்ப்பதற்கான அடித்தளத்தை மறுமலர்ச்சி இயக்கம் உண்டாக்கியமை என்பவற்றினால் 16ம் நூற்றாண்டில் இருந்து கிறிஸ்தவ திருச்சபைக்கு எதிரான ஒரு இயக்கம் தோற்றம் பெறத்தொடங்கியது. இதற்கு மாட்டின் லூதர் தலைமைவகித்தார்.