ஜேர்மனியில் நாசிஸத்தின் வளர்ச்சி
1.1 வளர்ச்சிக்கு ஏதுவான காரணிகள்
1. பாசிஸத்தைப்போலவே நாசிஸமும் வளர்ச்சியடைவதற்குரிய பின்னணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு முதலாம் உலகப்போருக்கே உரியது. ஜேர்மனியில் 1918 நவம்பரில் குடியரசு அரசாங்கம் உருவானதுடன் 1919ல் வைமார் அரசியல் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு உருமான வைமார் குடியரசானது தொழிலின்மை, பட்டினி, பஞ்சம் போன்றவற்றுக்குத் தீர்வினைத் தரவில்லை. இதைவிடவும் இத்தகைய புதிய ஆட்சியானது ஜேர்மனிய மக்களுக்கு பரிட்சயமான ஒன்றாக அமையைவில்லை. இதனால் குடியாட்சிக்கு தேசிய வலதுசாரிகளைக்கொண்ட தேசியகட்சியும், தீவிர இடதுசாரிகளைக்கொண்ட பொதுவுடமைக் கட்சியும் எதிர்ப்புத் தெரிவித்தது.
2. மேலும் போரில் வெற்றிபெற்ற நாடுகள் தோற்ற தம் மீது திணித்த ஒரு உடன்படிக்கையாகவே வேர்சைல் உடன்படிக்கையை ஜேர்மனியர் கருதினர். இதனால் உடன்படிக்கையின் அம்சங்கள் மக்களை வெறுப்படையச் செய்தது. இதன் காரணமாக உலகயுத்தத்தில் தம்மை தோற்கடித்தவர்களை பழிவாங்கவேண்டும் என்ற எண்ணமே ஜேர்மனியரிடம் பரவலாகக் காணப்பட்டது. இத்தகைய எண்ணத்தை ஹிட்லர் போன்றோர் சாதகமாக்கிக் கொண்டனர்.
3. 1924இன் பின்னர் புதிய நாணயப்புழக்கம், டோவெஸ் திட்டம் மூலம் நட்டஈடு குறைப்பு, அமெரிக்க வங்கிகளின் கடனுதவி, கைத்தொழில் வளர்ச்சி போன்றவற்றால் ஜேர்மனியின் பொருளாதாரம் சீரடைந்தது வந்தாலும் 1929 - 1930இல் ஏற்பட்ட பொருளாதார மந்தம் முழு உலகையும் பாதித்தது போலவே ஜேர்மனியையும் பாதித்தது. இப் பொருளாதார மந்தத்தினால் அமெரிக்கா ஜேர்மனுக்கு வழங்கிய கடனை நிறுத்திக் கொண்டது. இதனால் ஜேர்மனிய குடியரசின் கையிருப்புத் தீர்ந்ததுடன் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. இத்தகைய சந்தர்ப்பத்தில் மக்களுக்கு ஜனநாயகம் மீதான நம்பிக்கை அற்றுப்போனதுடன் ஹிட்டலரின் தேசிய சோசலிஷ கட்சிக்கு (இதிலிருந்தே நாசி எனும் சொல் தோன்றியது) மக்களின் ஆதரவு பெருகிற்று; நாடு முழுவதும் கட்சி பரவியது.
4. ஜேர்மனின் பொருளாதார பலவீனம், பணவீக்கம் என்பவற்றால் 1923ல் ஹிட்லர் புரட்சி ஒன்றினை ஆரம்பித்தார். இப்புரட்சி பியர் தவறணைகளில் ஆரம்பித்தமையினால் இது பியர் புரட்சி எனப்பட்டது. இப்புரட்சி போதிய ஆதரவின்மையால் தோற்றதுடன் ஹிட்லர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். சிறையிலிருக்கும் போது இவர் எழுதிய எனது போராட்டம் எனும் நூலானது ஜேர்மன் மக்களை பெரிதும் கவர்வதாய் அமைந்தது. சிறையிலிருந்து வெளிவந்ததும் ஹிட்லர் நாசிஸ கட்சியை ஆரம்பித்தார். இக்கட்சிக்கு ஆதரவு பெருகியது.
5. இவ்வாதரவு பெருகுவதில் ஹிட்லர் சிறையிலிருந்தபோது எழுதிய 'எனது போராட்டம்' (ஆநin முயஅpக)எனும் நூலில் உள்ளடங்கியிருந்த ஹிட்லரின் கொள்கைகளும் அவரது சிறந்த ஆளுமைமிக்க பேச்சாற்றலுமே காரணமாகும். சனநாயகம் இருக்கக் கூடாது, ஓர் சர்வாதிகாரியே அரசாங்கத்தை நடத்தவேண்டும், ஜேர்மனியரே உலகில் அதிசிறந்த இனம், அவர்கள் இராணுவ பராக்கிரமத்தால் உலகை ஆள வேண்டும். பொருளாதார வாழ்வின் சகல துறைகளிலும் அரசாங்கம் தலையிட வேண்டும் எனும் கொள்கைகளை ஹிட்லர் கொண்டிருந்தார். இத்தகைய திட்டங்கள் தம் நிலையை உயர்த்தலாம் என கைத்தொழிற்சாலை முதலாளிமார், மத்தியதரவகுப்பினர், தொழிலாளர்கள் போன்றோர் நம்பினர். ஹிட்லர் தன் கொள்கைத் திட்டங்களை தனது மக்களை ஈர்க்கும் பேச்சாற்றல் மூலமாகவும் தன் ஆதரவாளர்கள் மூலமாகவும் மக்கள் மத்தியில் பரப்பினார். ஹிட்லரின் இத்தகைய ஆளுமையும் அவரது கட்சியின் தீவிர பிரச்சாரமும் காரணமாக 1932 தேர்தலில் ஹிட்லர் ஜேர்மனியின் அதிபர் பதவிக்கு ஹின்டன்பர்க் என்பவருக்கு எதிராக போட்டியிட்டு சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போனாலும் 1933 தேர்தலில் அதிக பெரும்பான்மை பெற்று சான்சலரானார்.
6. ஜேர்மனிய மக்கள் பலமிக்க ஒரு தனி மனிதனின் சர்வாதிகாரத்துக்கு அடங்கியிருப்பதையே தம் சம்பிரதாயமாகக் கொண்டிருந்தனர். இவர்களிடத்தில் காணப்பட்ட யுத்த மனப்பாங்கே இதற்குக் காரணமாகும். இதனால் குடியரசு ஆட்சி தாபிக்கப்பட்ட போது தம்மைத்தாமே பரிபாலிப்பதிலும் பார்க்க அதிகாரம் நிரம்பப்பெற்ற ஒருவன் தம்மைப் பரிபாலிப்பதே மேலானது என அம்மக்கள் கருதினார்.
7. இக்காலத்தில் மேற்கு நாடுகளின் சனநாயகமும், ரஷ்யாவின் பொதுவுடைமைவாதமும் ஹிட்லரின் நாசிஸத்திற்கு எதிரான கொள்கையாக காணப்பட்டதால் இவ்விரு கொள்கைகளும் நிராகரிக்கப்பட்டதுடன் ஜேர்மனியிலிருந்த பொதுவுடைமையாளர்;கள் சித்திரவதை செய்யப்பட்டனர். இவ்வேளையில் மேற்கு நாடுகளும் ஜேர்மனுக்கு எதிராக செயற்படவில்லை. குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளிடத்தில் ஹிட்லருக்கு எதிராக செயற்படக்கூடிய ஒற்றுமை காணப்படவில்லை. இதனால் ஜேர்மனும் வேர்சைல் உடன்படிக்கைக்கு எதிராக செயற்படத் தொடங்கியது. 1935 மார்ச்சில் ஜேர்மன் தனது ஆயுத உற்பத்தி, கட்டாய இராணுவப்பயிற்சி என்பவற்றைப் பகிரங்கப்படுத்தியதுடன் 1935ல் பிரித்தானியாவுடன் செய்த உடன்படிக்கை சண்டைக்கப்பல், விமானம் என்பவற்றை உற்பத்தி செய்ய அனுமதித்தது.
1.2 நாசிஸத்தின் இயல்பு
1. ஹிட்லர் ஆரிய இனமே உயர்வானது எனும் கருத்தினைக் கொண்டிருந்ததுடன் ஜேர்மனியரே உலகில் அதிசிறந்த இனம், அவர்கள் இராணுவ பராக்கிரமத்தால் உலகை ஆள வேண்டும் எனவும் ஆரிய இன மேலாண்மை வாதத்தினை நாசிஸவாதிகள் நம்பினர்.
2. ஜேர்மனியர் எதிர்நோக்கும் பல்வேறு பல்வேறு இடைஞ்சல்களுக்கு யூதர்களே காரணம் என ஹிட்லர் நம்பினார் இதனால் ஆரம்பத்திலிருந்தே அவர் யூதர்களை வெறுத்தார். இதன் உச்சக்கட்டமே நாசிகளின் ஆட்சியில் ஏற்பட்ட யூதப்படுகொலைகளாகும். அவ்வாறே சமவுடைமைக் கொள்கைகளையும் ஹிட்லர் எதிர்த்திருந்தார். மாக்ஸிய கொள்கையை கடைப்பிடித்தோரை ஹிட்லர் துன்புறுத்தினார். அவுட் விட்ஸ், பர்கர் பெலடஷன், சொம்போர் என்பன ஹிட்லரின் முக்கிய வதை முகாம்களாகும்.
3. ஹிட்லர் தொழிற்சங்கங்கள் அனைத்தையும் கலைத்து 200 இலட்சம் தொழிலாளருக்கும் ஒரு சங்கத்தை ஏற்படுத்தினார். இது 'தேசிய சோஸலிசத்தின் முதற்படி எனவும் சர்வதேச சோஸலிசத்திலிருந்து வேறுபட்டது' எனவும் ஹிட்லர் கூறினார். அதே வேளை நாசிஸம் தனிச்சொத்துரிமையை பாதுகாத்ததுடன் முதலாளிகள், தொழிலாளர்கள், மத்தியதர வர்க்கத்தினர் போன்றோரை திருப்திப்படுத்தும் கொள்கைகளைக் கொண்டிருந்தது. எனவே ஹிட்லரின் நாசிஸமானது தேசிய சோஸலிஷம், முதலாலித்துவம் இரண்டும் கலந்ததொரு கொள்கையாகும்.
4. நாசிஸக் கொள்கையின் படி அரசே மிக உயர்வானதாகவும் தனிப்பட்டவர் அதற்கு அடங்கி நடக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. அவ்வாறே இங்கு எதிர்க்கட்சிகள் யாவும் ஒடுக்கப்பட்டன. நாசிஸ கட்சியின் தலைவராக ஹிட்லர் காணப்பட்டதுடன் கட்சியின் தலைவரை 'பியூரோர்' (குராசநச) என அழைத்தனர்.
5. நாசிஸமானது போருக்கு முதன்மையளிக்கும் ஒரு கொள்கையாகக் காணப்பட்டது. இதனால் ஹிட்லர் ஆட்சிக்கு வந்ததும் வேர்சைல் உடன்படிக்கையை புறக்கணித்ததுடன் போருக்கு வேண்டிய பயிற்சியளித்தல், ஆயுத உற்பத்தி, யுத்த தளபாட உற்பத்தி போன்றவற்றில் கவனம் செலுத்தினார்.
6. நாசிசம் ஒருமைய ஆட்சியை வலியுறுத்துவதால் சமஷ்டி ஆட்சிக்குப்பதிலாக மையப்படுத்தப்பட்ட ஆட்சியினை ஏற்படுத்துவதனையே நாசிகள் விரும்பினர். இதனால் பலவகையான மாவட்ட சட்டசபைகளும் ஒழிக்கப்பட்டதுடன் ஜேர்மனில் ஒருமைய ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
7. நாசிஸ ஆட்டசியில் பிள்ளைபெறும் இயந்திரங்களாக பெண்கள் கருதப்பட்டதுடன் பெண்கள் புறக்கணிக்கப்பட்டனர்.
1.3 விளைவுகள்
1. ஹிட்லர் ஆட்சிக்கு வந்தது ஏப்ரல் 1ல் ரீஸ்டாக் தன் அதிகாரத்தை பெற்று சர்வாதிகாரியானதும் ஜேர்மனின் வைமார் குடியரசினை ஒழித்ததுடன் 3ம் ரீச் எனும் ஜேர்மன் ராச்சியத்தை ஏற்படுத்தினார். (1. மத்தியகால ரோம ராச்சியம், 2. 1871 – 1918 வரையான பிஸ்மார்க்கின் ஜேர்மன் ராச்சியம், 3. ஹிட்லர் தனது ஜேர்மன் ராச்சியத்தை மூன்றாவது ராச்சியமாக கருதினார்.)
2. ஹிட்லர் கால ஜேர்மன் ராச்;சியம் தனிப்பட்டவரின் அடிபணிவு, ஜனநாயக ஒழிப்பு போன்ற கொள்கைகளைக் கொண்ட ஓர் சர்வாதிகார ஆட்சியாகவே விளங்கியது. 1934ல் குடியரசுத் தலைவர் இறந்ததைத் தொடர்ந்து குடியரசு தலைவரின் அதிகாரங்களையும் தன்வசப்படுத்திக்கொண்டார்.
3. ஹிட்லரின் நாசிஸ கட்சியானது இராணுவ முறையில் தாபிக்கப்பட்டதுடன் இவர்கள் கபில நிறச்சட்டையையும், கையில் தம் கட்சியின் சின்னமான சுவஸ்திகா இலட்சினையையும் அணிந்திருந்தனர்.
4. தேசியத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் இராணுவம் அமைக்கப்பட்டதுடன் ஜேர்மனியரை மட்டுமே உள்ளடக்கிய இராணுவமாக இது அமைக்கப்பட்டது. ஹிட்லரால் எஸ்.எஸ் (ளு.ளு) எனப்பட்ட இரகசிய இராணுவமும் 'கெஸ்டாபோ' எனப்பட்ட இரகசிய பொலிஸ்பிரிவும் தாபிக்கப்பட்டது.
5. ஹிட்லர் ஆட்சிக்கு வந்ததும் நாட்டில் பொருளாதார புனருத்தாபனத்தை மேற்கொண்டார். இதற்காக ஹிட்லரால் வேலையின்மை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 1936ல் ஹிட்லர் ரஷ்யாவைப் பின்பற்றி நான்கு வருட திட்டங்களை ஆரம்பித்தார். ஆயினும் ஜேர்மனில் போதியளவு இயற்கைவளங்கள் காணப்படாமையால் அவை சிறிய அளவிலேயே வெற்றிபெற்றன.
6. தொழிற்சங்கங்களுக்குப் பதிலாக முதலாளிமார், தொழிலாளர் பிரதிநிதிகளைக் கொண்ட தொழில் முன்னேற்ற அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. ஆயினும் பொருளாதார விருத்திக்காக வேலைநிறுத்தங்கள் தடைசெய்யப்பட்டன.
7. உற்பத்தித் துறையிலும் ஏனைய துறைகளிலும் அறிவியல் முறைகள் புகுத்தப்பட்டு அத்துறைகளில் துரித வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டன. செயற்கை இறப்பர், எண்ணெய், பருத்தி, கம்பளி, முதலியவற்றின் உற்பத்திக்கு விஞ்ஞானிகள் உதவியதுடன் இத்துறைகளின் முன்னேற்றத்தால் கைத்தொழில் வளர்ச்சி ஏற்பட்டதுடன், பல்வேறு இயந்திர சாதனங்களும் உற்பத்தி செய்யப்பட்டன.
8. நாடுமுழுவதும் பாடசாலைகள் ஏற்படுத்தப்பட்டு கல்வியறிவின்மையை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் நாசிசத்தை அடிப்படையாகக் கொண்ட பாடதிட்டத்திற்கே முன்னுரிமையளிக்கப்பட்டது. இத்துடன் நாசிசத்தில் நம்பிக்கை கொண்டோரே இங்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
9. வேர்சைல் உடன்படிக்கையினை முற்றாக புறந்தள்ளிய ஹிட்லர் உள்நாட்டில் இராணுவப் பயிற்சி, ஆயுத உற்பத்தி என்பவற்றை மேற்கொண்டதுடன் 1933ல் சர்வதேச சங்கத்திலிருந்தும் விலகிக் கொண்டார். இதன்பின் ரைன்லாந்து, சுடேற்றன்லாந்து, செக்கோஸ்லாவாக்கியா என்பவற்றைக் கைப்பற்றியதுடன், தன்னைப்போல் ஆக்கிரமிப்புக் கொள்கையை பின்பற்றிய இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொண்டார். இத்தகை உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கைகள் மீண்டும் ஒரு உலகப்போர் ஏற்படக்காரணமானது.
Comments
Post a Comment