கைத்தொழில் புரட்சியானது பிரித்தானியாவில் முதலாவதாக ஏற்பட்டுக் கொண்ட போதிலும் 1825 வரையான காலத்தில் பிரித்தானிய விஞ்ஞானிகளும், தொழினுற்பமும் வெளிச்செல்ல பிரித்தானியாவால் தடுக்கப்பட்டமையும் அந்தந்த நாடுகளில் காணப்பட்ட அரசியல், பொருளாதார, சமூக நிலைகளும் ஏனைய நாடுகளில் புரட்சி பரவுவதில் தாமதத்தினை ஏற்படுத்தின. 19ம் நூற்றாண்டிலிருந்தே கைத்தொழிற் புரட்சியானது ஏனைய நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ்,ஜேர்மனி, சுவீடன், ஆஸ்திரியா, ஹங்கேரி, ஐக்கிய அமெரிக்கா, யப்பான் போன்ற நாடுகளுக்கு பரவியது.
1820ன் பின்னர் பெல்ஜியத்தில் கைத்தொழில் புரட்சி ஆரம்பித்தது. அங்கு காணப்பட்ட நிலக்கரி, இரும்புத்தாது போன்றன கைத்தொழில் புரட்சி ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைந்தன. பிரான்சினைப் பொறுத்தமட்;டில் பிரான்சியப் புரட்சி, நெப்போலிய யுத்தங்களால் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலை, உள்நாட்டு இறைவரிக் கொள்கை, பிரான்சிய மக்கள் இயந்திரங்கள் மூலம் செய்யப்பட்ட பொருட்களை விட கைகளால் செய்யப்பட்ட பொருட்களையே அதிகம் விரும்பியமை, பிரான்சில் தரமான நிலக்கரி கிடையாமை போன்ற காரணிகளால் பிரான்சில் கைத்தொழில் புரட்சி ஏற்படுவது தாமதித்தாலும் 19ம் நூற்றாண்டிலில் கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்கு அரச ஆதரவு கிடைத்தது.
1871ல் ஜேர்மனிய ஐக்கியத்தினைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட அரசியல் ஸ்தீரணமும் இரும்புத்தாது, நிலக்கரி போன்ற வளங்கள் அங்கு காணப்பட்டமையும் 19ம் நூற்றாண்டில் ஜேர்மன் பலமிக்க கைத்தொழில் நாடாவதற்கு காரணமாகியது. ரஷ்யா ஓர் விவசாய நாடாக காணப்பட்ட போதிலும் 1917 அக்டோபர் புரட்சியின் பின்னர் அங்கு கைத்தொழிற்றுறையானது புரட்சிகர மாற்றங்களுக்குட்பட்டது. பத்து வருட குறுகிய காலத்துக்குள் ரஷ்யாவானது உருக்கு, இரசாயன, இயந்திரவியல், பெற்றோலிய கைத்தொழில்களில் துரித வளர்ச்சி கண்டது.
பிரித்தானியாவில் கைத்தொழில் புரட்சி நடைபெற்ற பொழுது அமெரிக்கா பிரித்தானியாவின் காலனியாக விளங்கியது. பொருளாதார பலமே தம்மை சுதந்திரத்திற்கு இட்டுச் செல்லும் என நம்பிய அமெரிக்கர் கைத்தொழில் புரட்சியினை வரவேற்றதுடன் இங்கு காணப்பட்ட வளங்கள், பெரிய உள்நாட்டுச் சந்தை, தடையில்லா போக்குவரத்து வசதி போன்றவற்றினால் 19ம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்கா பலமான கைத்தொழில் நாடானது.
1970ன் பின்னர் ஜப்பானிலும் கைத்தொழில் புரட்சி ஏற்பட்டது. இங்கு மேஜிஜி காலத்தில் மேலைத்தேய கல்வி வளர்ச்சி, கைத்தொழிலை வளர்ப்பது தொடர்பான அரச கொள்கை, வங்கிகள் நிறுவப்பட்டமை என்பவற்றைத் தொடர்ந்து அங்கு கைத்தொழில் மயமாக்கல் ஏற்பட்டது. பிரித்தானியாவைப் போன்று இங்கும் நெசவுத் துறையிலேயே புரட்சி ஆரம்பித்தது.
கைத்தொழிற் புரட்சிக்கான காரணங்கள்
1) போதிய முலதனத் திரட்சி– 16ம் நுற்றாண்டிலிருந்து பிரித்தானியாவில் விருத்தியடைந்த வெளிநாட்டு வியாபாரம் சிறு கைத்தொழிலின் விருத்தி என்பவற்றால் மக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்தது. இதனால் வங்கிகள் போன்ற நிதியியல் சார் நிறுவனங்கள் தோற்றம் பெற்றன. இவ்வாறு தோற்றம் பெற்ற வங்கிகளில் வைப்பிடப்பட்ட பணத்தின் மூலமாக மூலதனத்திரட்சி உண்டானது. வங்கிகளும் முதலீடு, கடன் போன்ற வசதிகளை வழங்கி வந்தன. இவ்வாறாக தொழிற்றுறைக்கு வேண்டிய மூலதனம் கிடைத்தமையானது கைத்தொழில் புரட்சி ஏற்படுவதற்கு காரணமாய் அமைந்தது.
2) சந்தைகளின் பெருக்கம் - பிரித்தானியப் பேரரசானது 17¬¬ம்,18ம் நூற்றாண்டில் ஆசிய, ஆபிரிக்க, அமெரிக்க கண்டங்களில் வளரத்தொடங்கியதுடன் பிரித்தானியா அந்நாடுகளுடன் வர்த்தக உறவினையும் விருத்தி செய்துகொண்டது. எனவே பிரித்தானிய உற்பத்திகளுக்கு பாரம்பரியமான ஐரோப்பிய சந்தைகளினைத் தாண்டி ஆசிய, ஆபிரிக்க, அமெரிக்க சந்தைகளிலும் வாய்ப்புக்கள் ஏற்பட்டன. எனவே சந்தைகளின் பெருக்கத்திற்கு ஏற்ப அவற்றின் கேள்வியை பூர்த்தி செய்யும் வகையில் விரைவாகவும் அதிகமாகவும் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டமை.
3) அரசியல் உறுதிப்பாடு - ஏனைய ஐரோப்பிய நாடுகளில் மானிய முறையின் முக்கிய அம்சங்கள் மறைந்து போகும் முன்னமே பிரித்தானியாவில் மானியமுறை வலுவிழந்துவிட்டது. இது அரசியல் உறுதிப்பாடு உருவாவதற்கு காரணமானதுடன் மூலதன திரட்சிக்கும் வழிவகுத்தது. அதுமட்டுமல்லாது 1688ஆம் ஆண்டின் புரட்சியின் பின்னரான அமைதியான அரசியல் நிலையானது புதிய தொழில் முயற்சிகளினை ஆரம்பிப்பதற்கான நம்பிக்கையினை ஏற்படுத்தின.
4) பாரிய கைத்தொழில் முயற்சிகளுக்கு அனுசரனை வழங்கக்கூடிய முயற்சியாளர் வகுப்பு தோற்றம் பெற்றமை - நிலமானிய முறைமையினது வீழ்ச்சியின் பின்னர் பிரித்தானியாவில் ஆதிக்கம் செலுத்திவந்த நிலச்சொந்தக்காரர்கள் கைத்தொழில், வர்த்தக முயற்சிகள் மூலம் இலாபமடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. இத்தகைய உயர்குடியினைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் வர்த்தக, தொழில் முயற்சியில் அதிக ஈடுபாடு காட்டினர்.
5) விவசாயத்துறையினில் புரட்சி ஏற்பட்டமை - பிரித்தானியாவில் ஏற்பட்ட விவசாயப் புரட்சியினால் விவசாய நிலங்களிலிருந்து கூடிய பயனைப் பெரும் பொருட்டு சிறிய நிலங்கள் இணைக்கப்பட்டு பெரிய பண்ணைகள் உருவாக்கப்பட்டு பாரியளவில் விவசாயம் செய்யப்பட்டது. இதன் காரணமாக நிலத்தை இழந்த சிறுநில விவசாயிகள் தமது தொழிலினை இழந்த நிலையில் தம் ஜீவனோபாயத்திற்காக நகர்ப்பகுதியில் விருத்தியடைந்து வந்துகொண்டிருந்த கைத்தொழிற்றுறையில் இணைந்து கொண்டமையினால் கைத்தொழிற்றுறைக்கு வேண்டிய போதிய தொழிலாளர்கள் கிடைத்தமை.
6) முலப்பொருட்களை வெளிநாடுகளில் இருந்து பெறக்கூடியதாக இருந்தமை - நிலக்கரி, இரும்புத்தாது போன்றன இங்கிலாந்திலே அதிகளவு கிடைக்கக் கூடிய வளங்களாக இருந்தன. இவை கைத்தொழிலுக்காக அதிகம் பயன்படுத்தப்பட்டன. இத்துடன் பிரித்தானிய பேரரசானது தான் கைப்பற்றி வைத்திருந்த நாடுகளிலிருந்து தேவையான முலப்பொருட்களை மலிவாகவும் அதிகளவிலும் பெற்றுக்கொள்ள முடிந்தமை. சான்றாக இந்தியா, எகிப்து, சூடான் போன்ற நாடுகளில் இருந்து பிரித்தானியாவின் நெசவுத் தொழிலுக்கு வேண்டிய உயர்தரமான பஞ்சு பெறப்பட்டமை.
7) அறிவு மறுமலர்ச்சி, புதிய கண்டுபிடிப்புக்கள் - இக்காலத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்த விஞ்ஞானிகளும் பொறியியலாளர்களும் காலத்தின் தேவைக்கு ஏற்றாற்போல் பல்வேறு கருவிகளினை கண்டுபிடித்தனர். நிலக்கரி, இரும்பு போன்றவற்றின் பயன்பாடு நெசவுத்தொழிலுக்கு வேண்டிய கருவிகள், நீராவித் தொழினுற்பம் போன்றன அவற்றுள் குறிப்பிடத்தக்கன. அரசாங்கத்தினாலும் புதிய கண்டுபிடிப்புகளுக்காக ஊக்கமளிக்கப்பட்டது. இவையும் கைத்தொழில் வளர்ச்சியடைவதற்கு வலுச்சேர்த்தன.
8) போக்குவரத்து வசதியின் விருத்தி - அக்காலத்தில் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் காணப்பட்டதைவிட நன்கு வளர்ச்சியடைந்த போக்குவரத்து கட்டமைப்பினை பிரித்தானியா கொண்டிருந்தது. மூலப்பொருட்களையும் முடிவுப் பொருட்களையும் கொண்டு செல்வதற்கு முறையான வீதிகள், கால்வாய்கள் போன்றவற்றினை அரசாங்கமே அமைத்துக் கொடுத்தது. நாடு முழுவதும் பரந்திருந்த வீதிக்கட்டமைப்புகளே பிரித்தானியாவின் கைத்தொழிற் புரட்சிக்கு உதவியாக இருந்ததென அடம் ஸ்மித் தனது 'நாடுகளின் செல்வம்' எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
9) புவியியல் ரீதியான அமைவிடம் - பிரித்தானிய தீவுகள் அத்திலாந்திக் சமுத்திரத்திற்கு மத்தியில் அமைந்துள்ளன. இதனால் தன் கடல் வலிமையினை அதிகரித்துக்கொண்ட பிரித்தானியா பிற நாடுகளிலிருந்து முலப்பொருட்களைப் பெறுவதற்கும் வணிக நடவடிக்கைகளினை மேற்கொள்வதற்கும் அதன் அமைவிடம் வாய்ப்பானதாக விளங்கியதுடன் பிரித்தானியாவுக்கு பாதுகாப்பினையும் வழங்கியது.
10) விருத்தியடைந்த வங்கிகள், நிதி நிறுவனங்கள் காணப்பட்டமை - மத்திய வங்கி, பங்குச்சந்தைகள், காப்புறுதிக் கம்பனிகள் போன்றன புதிய முதலீடுகளுக்கும் தொழில் முயற்சிகளுக்கும், வர்த்தக நடவடிக்கைகளுக்கும் தூண்டுதலாக அமைந்தன. இத்தகைய நிலையினை வட பிரித்தானியாவில் தெளிவாக காணமுடிந்தது.
11) கைத்தொழில் வளர்ச்சிக்காக அரசு பின்பற்றிய கொள்கைகள் - சொத்து, உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பிலும் புதிய கண்டுபிடிப்பாளர்கள் வர்த்தக ரீதியிலில் பயன் பெறும் வகையில் அறிவுசார் சொத்துடமை தொடர்பிலும் புதிய சட்டங்களை கொண்டுவந்ததுடன் தன் கடற்படை வலிமையின் மூலமாக வெளிநாட்டு வர்த்தகங்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்கியமையானது கைத்தொழில் புரட்சி ஏற்படுவற்கான சூழ்நிலையினை வழங்கியிருந்தது.
கைத்தொழிற் புரட்சியினது விளைவுகள்
கைத்தொழில் புரட்சியானது இங்கிலாந்திலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்படுவதற்கு பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் காரணிகள் இன்றியமையாது இருந்தது போலவே கைத்தொழில் புரட்சியும் சமூக, பொருளாதார, அரசியல் விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது.
சமூக ரீதியான விளைவுகள்
1. நகரங்களின் வளர்ச்சி, நகரமயமாக்கம் - பண்ணை விவசாய முறைமையினது விருத்தியினால் ஏற்பட்ட வேலியடைப்பினைத் தொடர்ந்து கிராமங்களில் வாழ்ந்த மக்கள் வேலை வாய்ப்பிற்காக நகர்ப்பகுதிகளில் அமைந்திருந்த கைத்தொழிற் சாலைகளினை நாடினர். கைத்தொழிற் புரட்சிக்கு முன்னராக 80 சதவீதமாக காணப்பட்ட பிரித்தானியாவின் சனத்தொகை 1871ல் 28 சதவீதமாக குறைந்தது. இவாறான நகரங்களுள் லண்டன், லிவர்பூல், மஞ்செஸ்டர் போன்றன குறிப்பிடத்தக்கன. 1850ம் ஆண்டுகளில் ஐரோப்பாவின் ஏனைய நகரங்களில் காணப்பட்டதை விட இங்கு அதிக சனத்தொகை காணப்பட்டது.
2. பாரம்பரிய சமூகக் கட்டமைப்பு நிலைகுலைவு– ஆரம்பத்தில் உயர்குடியினர், சாதாரண மக்கள் எனும் இரு பிரிவினர் காணப்பட்டனர். இவ்விரு வகுப்பாரும் நிலத்தோடு தொடர்புபட்ட வகையில் நில உரிமையாளராகவும் பண்ணை அடிமைகளாகவும் காணப்பட்டனர். ஆயினும் கைத்தொழிற் புரட்சியின் பின்னர் உற்பத்திக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு சமூகக் கட்டமைப்பானது முதலாளி – தொழிலாளி என மாற்றமுற்றது. இச்சமூகக் கட்டமைப்பில் குடும்பத் தேவைக்காக சிறுவர்களும் பெண்களும் உழைக்கவேண்டி ஏற்பட்டதுடன் அவர்களது உழைப்பு கடுமையாக சுரண்டப்பட்டது.
3. முதலாளி, தொழிலாளர் வர்க்கமும் வர்க்கப்போராட்டமும் - உற்பத்திக் காரணிகளுக்கு சொந்தமான முதலாளி, தன் உழைப்பை விற்பதற்கு தயாராகவிருக்கும் தொழிலாளி என பிரதானமான இருவர்க்கங்கள் கைத்தொழிற் சமூகத்தில் உருவாகிக் கொண்டது. முன்னர் குடிசைக் கைத்தொழிலில் தேர்ச்சிமிக்கோராக காணப்பட்ட தொழிலாளர் இயந்திரங்கள் நிறைந்த தொழிற்சாலைகளில் தேர்ச்சியற்ற தொழிலாளராகவே காணப்பட்டனர். இதனால் முதலாளிகளின் சுரண்டலும் அதிகரித்தது. இந்நிலைமை முதலாளி – தொழிலாளி வர்க்கப்போராட்டத்திற்கு இட்டுச்சென்றது.
4. நடுத்தர வகுப்பாரின் தோற்றம் - முதலாளி, தொழிலாளி எனும் இரு வகுப்பினருக்குமிடையில் நாற்கூலியினை நம்பியிராத மத்தியதர வகுப்பொன்று உருவானது. 19ம் நூற்றாண்டிலிருந்து புதிய தொழிற்றுறையிலும், அரச துறைகளிலும் பணிபுரிந்தோராகவும் இவர்கள் விளங்கினர். வியாபாரிகள், வங்கி முகாமையாளர்கள், காப்புறுதி முகவர்கள், கணக்காளர்கள், முகாமையாளர்கள், வழக்கறிஞர், ஆசிரியர் போன்றோர் இவ் மத்தியதரவகுப்பில் அடங்குவர். இவர்களது வாழ்க்கை முறையானது முதலாளிகளைப் போன்று ஆடம்பரமாக அமையாது விடினும் தொழிலாளர் வகுப்பைவிட உயர்வானதாகவே காணப்பட்டது. லண்டன், லிவர்பூல், மஞ்செஸ்டர், பர்மிங்ஹாம் போன்ற நகரங்களில் மத்திய தர வர்க்கத்தினரின் தோற்றத்தினை அவதானிக்க முடிந்தது.
5. தொழிலாளரின் மோசமான வாழ்க்கை நிலை¬– கைக்தொழில்சாலைகளில் பணிபுரிந்த தொழிலாளர்களது நிலையானது மிகவும் மோசமானதாக இருந்தது. கடினமான தொழில் நிலைமை, சன நெரிசல் மிக்க குடியிருப்புக்கள், சுத்தமான சூழலின்மை போன்றவற்றாலும் மிக மோசமான பிரச்சினைகளினை எதிர் நோக்கினர். இதனால் கொலரா, காசநோய், தைபொயிட்டு போன்ற நோய்களால் தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். 1849ல் லண்டனில்10,000 பேர் கொலரா நோயினால் இறந்தனர்.
6. சூழல் மாசடைதல் - கைத்தொழில் புரட்சியானது ஏற்பட்ட காலத்தில் பிரதான எரிபொருளாக நிலக்கரி பயன்படுத்தப்பட்டது. இதிலிருந்து வெளியான காபன் வளிமண்டல மாசடைவிற்குக் காரணமானதுடன் மூலப்பொருட்களான இரும்புத்தாதுவினை அகழ்தெடுக்கும் முயற்சியும் தொழிற்சாலை கழிவுகளை அகற்றும் முறைமையும் நிலத்தையும் நீரையும் கடுமையாக மாசுபடுத்தியது.
பொருளாதார விளைவுகள்
1. விவசாயப் பொருளாதாரம் கைத்தொழில் பொருளாதாரமாக மாற்றமுற்றமை– பிரித்தானியாவின் பொருளாதாரமானது கைத்தொழிற் புரட்சிக்கு முன்னர் விவசாயத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஆயினும் கைத்தொழிற் புரட்சிக்குப் பின்னர் 19ம் நூற்றாண்டில் 40 சதவீதத்திற்கும் குறைவான உணவு உற்பத்தியே பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்டதுடன் பிரித்தானியாவின் கைத்தொழிற் பொருட்களை உலக நாடுகளனைத்திலும் சந்தைப்படுத்தக்கூடிய அளவிற்கு பிரித்தானியா 'உலகின் தொழிற்சாலையாக' மாற்றமுற்றது. இதனால் பிரித்தானியாவின் செல்வச் செழிப்பானது முழுவதுமாக கைத்தொழிற்றுறையினையே நம்பியிருக்கம் நிலைக்கு மாற்றமுற்றது.
2. குடிசைக் கைத்தொழில் வீழ்ச்சியுற்றமை – பிரித்தானியாவின் கிராமப்புறங்களில் குடிசைக் கைத்தொழில் சிறப்புற்றிருந்த போதிலும் பாரிய தொழிற்சாலைகளில் பெரியளவில் உற்பத்திகள் ஆரம்பமான பின்னர் கிராமிய மக்களும் வேலை வாய்ப்பினைத்தேடி நகர்ப்பகுதிகளில் குடியேறியமையைத் தொடர்ந்து நெசவுக்கைத்தொழில் போன்ற குடிசைக் கைத்தொழில்கள் பாதிக்கப்பட்டன.
3. முதலாளித்துவத்தின் வளர்ச்சி– கைத்தொழில் புரட்சியின் பின்னர் உருவான மூலதனத் திரட்சியினைத் தொடர்ந்து முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து நாட்டினது அரசியல் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக மாறியது. இவ் முதலாளித்தவம் சார்ந்த அரசியல் நாடுகளிடையே பல்வேறு சச்சரவுகளுக்கும் வர்க்க மோதல்களுக்கும் காரணமாக அமைந்தது.
4. தனியார் துறையின் வளர்ச்சி– தொழிற்சாலையின் உரிமையாளர்களாக இருந்த முதலாளிகள் பல்வேறு துறைகளில் முதலீடுகளை மேற்கொண்டமையும் இதற்கு அரச ஆதரவு வழங்கப்பட்டமையும் தனியார் துறை சார்ந்த பொருளாதாரம் வளர்ச்சியடையக் காரணமானது. வங்கிகள், காப்புறுதித் தாபனங்கள், பல்வேறு கம்பனிகள் போன்றன கைத்தொழில் துறையின் வளர்ச்சியோடு இணைந்து வளர்ந்த தனியார் துறைசார்ந்த முக்கிய நிறுவனங்களாகும்.
5. நவ குடியேற்றவாதத்தின் வளர்ச்சி– 20ல் நூற்றாண்டில் ஏகாதிபத்தியத்தின் கீழிருந்த பல்வேறு நாடுகள் சுதந்திரமடைந்த பின்னர் கைத்தொழில் நாடுகள் தமக்குத் தேவையான மூலப்பொரட்களைப் பெறவும் முடிவுப் பொருட்களை சந்தைப்படுத்தவும் பல்வேறு நூதன வழிமுறைகளில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளை கட்டுப்படுத்துகின்றன. இதுவே நவ குடியேற்றவாதம் எனப்படுகிறது.
அரசியல் விளைவுகள்
1. பல்வேறு அரசியல் பொருளாதார கொள்கைகளின் தோற்றம் - முதலாளித்துவம், சமூகவுடைமைவாதம், மாக்ஸிஷவாதம், பயன்பாட்டுவாதம், தலையிடா அரசுக் கொள்கை என்பன பல்வேறு அறிஞர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டமைக்கு கைத்தொழிற் புரட்சி ஏற்படுத்திய தாக்கங்களே காரணமாக அமைந்தன. பின்னர் இவற்றின் அடிப்படையிலேயே அரசின் போக்குகளும் பொருளாதாரமும் ஆராயப்படலாயின.
2. தொழிலாளர் அமைப்புக்களும் நலன் பேணும் சட்டங்களும் உருவானமை– சுரண்டலுக்குள்ளான தொழிலாளர்கள் தமது நிலையினை மேம்பாடடையச் செய்யும் வகையில் தொழிற்சங்கங்களை உருவாக்கிக் கொண்டனர். ஆரம்பத்தில் இவை முதலாளித்துவத்தின் இயந்திரமான அரசினால் ஒடுக்கப்பட்ட போதும் தொடர்ந்தும் தொழிலாளர் முயற்சியை அடக்க முடியவில்லை. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் போன்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் தொழிலாளர்கள் படிப்படியாக பல்வேறு உரிமைகளைப் பெறமுடிந்தது. வேலை நேரக் குறைப்பு, வேலைத்தளப் பாதுகாப்பு, விடுமுறைகள் போன்றன அத்தகைய சில உரிமைகளாகும்.
3. ஏகாதிபத்தியத்தின் விரிவு– கைத்தொழில் நாடுகள் தமது இலாபத்திற்காக பல்வேறு நாடுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் தமது ஏகாதிபத்தியத்தின் கீழ் வைத்திருப்பது அவற்றுக்கு இலாபமான ஒன்றாகையால் தமது ஏகாதிபத்தியத்தினை விரிவுபடுத்திக் கொண்டன. இதனால் நாடுகளுக்கிடையில் ஏகாதிபத்தியத்தை விரிவுபடுத்திக் கொள்வதில் போட்டிகள் எற்பட்டன. இதுவே உலகப் போர்களுக்கும் காரணமானது. இத்தகைய நிலையானது 21ம் நூற்றாண்டிலும் தொடர்கிறது.
தொகுப்பு –ம.நிஷாந்தன்
கைத்தொழில் புரட்சியை பற்றி மிக தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது... வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteவாழ்த்துக்கள் சேர் தொடரட்டும் உங்கள் பணி
ReplyDelete