ஐரோப்பாவின் பல அரசுகள் புரட்டஸ்தாந்து மதத்தினை ஏற்றக் கொண்டமையினால் சமய ரீதியாக ஐரோப்பா இரண்டானது. இக்காலத்தில் ஐரோப்பாவில் ஜேர்மனை மையமாகக் கொண்டு புரட்டஸ்தாந்து சமயத்தவருக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவருக்கும் இடையே 1618 -1648 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தமே முப்பதாண்டு யுத்தம் எனப்படுகிறது.
முப்பதாண்டு போருக்கான காரணங்கள்
ஐரோப்பிய நாடுகள் ஜேர்மனை மையமாகக் கொண்டு ஐரோப்பாவில் முப்பது வருடங்களாக போர் புரிந்தமைக்கு நேரடியாக சமயரீதியில் இருந்த முரண்பாடுகள் காரணங்களாக சுட்டிக் காட்டப்பட்ட போதிலும் அப்போர் வளர்ச்சியடைந்து செல்வதற்கு அரசியல், பொருளாதார காரணிகளும் பங்களிப்பு செய்திருந்தது.
சமயக் காரணங்கள்.
1. ஒக்ஸ்பேர்க் சமாதான உடன்படிக்கையின் குறைபாடுகள்:
ஒக்ஸ்பேர்க் ஒப்பந்தத்தின் அம்சங்களினை மீறும் வகையில் புரட்டஸ்தாது சமயத்தவர்கள் கத்தோலிக்க குருமாரின் மடங்களை உலகியல் தேவைக்கு பயன்படுத்தியும் கத்தோலிக்க சமயத் தலைவரின் அலுவலங்களை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கைப்பற்றியும் வந்தனர். இதனால் கத்தோலிக்கர்களுக்கு சொந்தமாகவிருந்த பெரிய நிலப்பரப்பும் கட்டடங்களும் புரட்டஸ்தாந்தர் வசமானமை கத்தோலிக்கரை கோபத்துக்குள்ளாக்கியது.
1555 ஒக்ஸ்பேர்க் சமாதான ஒப்பந்தம் ஏற்படும் போது புரட்டஸ்தாந்து சமயம்போல் கல்வினியம் ஜேர்மனில் முக்கியம் பெற்று இருக்கவில்லை இதனால் ஒப்பந்தத்தில் கல்வினின் மதக் கொள்கைகளை பின்பற்றியோர் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் கத்தோலிக்கமும், புரட்டஸ்தாந்து மதமுமே அரசமதமாக பின்பற்றப் படக்கூடிய நிலை காணப்பட்டது. ஆயினும் சிறிது காலத்தில் ஜேர்மனில் இருந்த பெருந்தொகையான இளவரசர்களும் மக்களும் கல்வினின் கருத்துக்களைப் பின்பற்றத் தொடங்கினர். பெலடைன், பிரன்டன்பேர்க் போன்றன கல்வினியத்தை புதிதாக பின்பற்றத் தொடங்கின. (இவர்கள் சில விடயங்களில் லூதரிக் கருத்துக்களுக்கு மாறான கருத்துக்களை கொண்டிருந்தனர்.) ஒக்ஸ்பேர்க் சமாதான ஒப்பந்தத்தில் கல்வினிய மதம் பற்றி எதுவும் கூறப்படவில்லை இதனால் அச்சமயத்தவருக்கு சட்டத்தின்பாதுகாப்பு இருக்கவில்லை. ஆகையால் கல்வினின் கொள்கையை பின்பற்றியோர் தமது மதத்தை அரச மதமாக்கிக் கொள்ள செயற்படவேண்டியிருந்தமை.
2. எதிர் சமய தீர்திருத்தம் ஏற்பட்டமை
பேரரசனான 5ம் சால்ஸ்ஸின் பின்னர் ஆட்சிக்கு வந்த 1ம் பேர்டினனும் (1556-1564) மெக்சிமிலியனும் (1564-1576) மிதவாதிகளாக இருந்ததுடன், இரு தரப்பிலும்அமைதியை ஏற்படுத்த முயற்சித்தனர். இதனை புரட்டஸ்தாந்து இளவரசர்களும் ஆதரித்து வரலாயினர் இதனால் உடனடியாக உள்நாட்டுப் போர் ஒன்று ஏற்படுவது தவிர்க்கப்பட்டு வந்தாலும் பேரரசன் ரூடொல்பின் ஆட்சியில் ஏற்பட்ட எதிர் சமய சீர்திருத்தத்தினால் பலர் மீண்டும் கத்தோலிக்க மதத்துக்கு திரும்பியதுடன் புரட்டஸ்தாந்து மதம் பரவுவதற்கும் தடை ஏற்பட்டது. இதனால் சமயங்களுக்கு இடையில் பிணக்கு தோன்றும் நிலை ஏற்பட்டது.
3. இரு சமயத்தவரும் வெவ்வேறு அமைப்புக்களை ஏற்படுத்திக் கொண்டதால் யுத்தம் தொடர்பான பதற்றம் அதிகரிக்கத் தொடங்குதல்.
டன்யூப் பிரதேசத்தில் பேரரசைச் சேர்ந்த பிரதேசமாகவிருந்த டொனொளவோர்த் புரட்டஸ்தாந்து நாடாகவிருந்தது. இதன் நகராட்சிக் குழு கத்தோலிக்க சமய வழிபாடுகளுக்கு இடங்கொடுத்த அதே வேளை பகிரங்கமாக கத்தோலிக்க சமய வழிபாடுகள் நடப்பதை தடுத்தது. இவ்வேளையில் அங்கு கத்தோலிக்கர்கள் 1606ல் நடத்திய சமய ஊர்வலம் ஒன்ற கலைக்கப்பட்டதால் சீற்றம் கொண்ட மக்கள் கத்தோலிக்கர் பேரரசன் ரூடொல்பிடம் முறையிட்டனர். இதனால் அந்நகர் பேரரசனால் தனது ஆட்சிக்க உட்பட்ட பிரதேசமாக்கப்பட்டது. இவ்வேளையில் பவேரிய நாட்டரசன் மெக்ஸிமிலியன் டொனொளவோர்த்தை வென்று அதனை வலுக்கட்டாயமாக கத்தோலிக்க நாடாக மாற்றினான்.
பவேரிய நாட்டரசன் மெக்ஸிமிலியன் இத்தகைய செயலால் சீற்றமுற்ற கல்வினின் ஆதரவாளர்கள் ஒன்றினைந்து டொனொளவோர்த் சம்பவம் போன்று மீண்டும் ஏற்படக் கூடாது என்பதற்காக 1608ல் பெலடைன் அரசன் தலைமையில் 'புரட்டஸ்தாந்து யூனியன்' ஒன்றினை ஏற்படுத்தினர். இவ்வியக்கத்தால் பவேரிய நாட்டரசன் மாக்ஸிமிலியன் எச்சரிக்கப்பட்டான் இதனால் இவன் கத்தோலிக்க இரவரசர்கள் சிலரை சேர்த்துக் கொண்டு 1609ல் 'கத்தோலிக்க சங்கம்' ஒன்றினை ஏற்படுத்தினான். இவ்வாறு இரு வேறு அணிகள் தோற்றம் பெற்றுக் கொண்டமையால் எவ்வேளையிலும் போர் ஒன்று ஏற்படலாம் எனும் பதற்றநிலை ஜேர்மனியில் ஏற்பட்டது.
4. ஜேர்மனியில் வாழ்ந்த புரட்டஸ்தாந்து மக்கள் துன்புறுவதைக் கண்ட புரட்டஸ்தாந்து நாடுகள் உதவ முன்வந்தமை
இதன் காரனமாகவே டென்மார்க், சுவீடன் போன்ற நாடுகள் முப்பதாண்டு யுத்தத்தில் ஜேர்மன் சார்பாக கலந்து கொண்டன. எனினும் இவர்களுக்கு சமயரீதியான காரணத்தை தவிர தம் சுயநலன்களும் இருக்கவே செய்தன.
அரசியல் காரணங்கள்
1. பொஹீமியாவிலிருந்த புரட்டஸ்தாந்து மதத்தினர் ஆயுதபாணிகளாக பொஹீமியாவின் பிறேக் அரன்மனையில் புகுந்து சக்கரவர்த்தியின் பிரதிநிதிகள் இருவரை ஐன்னல் வழியாக வெளியே தூக்கியெறிந்தனர்.
1617ல் பொஹிமியாவை ஆட்சி செய்த 2ம் பேர்டினன்ட் ஹப்ஸ்பேர்க் வம்சத்தை சேர்ந்த கத்தோலிக்கனாக இருந்தான். இவன் புரட்டஸ்தாந்து மதத்தினரை அடக்க எண்ணம் கொண்டிருந்தான். இதனால் பொஹீமிய மக்கள் 1609ல் பெற்ற அரச கட்டளை மூலம் அனுபவித்து வந்த சமய சுதந்திரத்தை ஒழிக்க முயற்சி செய்தான். இதனால் பொஹீமியாவில் உள்ள புரட்டஸ்தாந்து ஆலயங்கள் அழிக்கப்பட்ட போது 1618ல் பொஹீமியாவிலிருந்த புரட்டஸ்தாந்து மதத்தினர் ஆயுதபாணிகளாக பொஹீமியாவின் பிறேக் அரன்மனையில் புகுந்து சக்கரவர்த்தியின் பிரதிநிதிகள் இருவரை ஐன்னல் வழியாக வெளியே தூக்கியெறிந்தனர். இதனைத் தொடர்ந்து புரட்சியாளர்கள் தற்காலிக அரசாங்கம் ஒன்றை நிறுவியதுடன் 1619ல் பலற்றினேற் அரசனும் இங்கிலாந்து அரசனாகிய முதலாம் ஜேம்ஸின் மருமகனுமாகிய 5ம் பிரடெரிக்கை அரசனாக்கினர். பலற்றினேற் அரசன் பிரடெரிக் அரசை ஏற்றமையானது புரட்டஸ்தாந்து மத்தினர் பரிசுத்த உரோம சாம்ராஜ்ஜியத்துக்கு எதிரானவர்கள் எனும் நிலையை ஏற்படுத்தியதுடன் உடனடியாக சமய யுத்தம் ஒன்று ஏற்படவும் இதுவே காரணமானது.
2. பரிசுத்த உரோமப் பேரரசனுக்கும் ஜேர்மனியின் சுதந்திர அரசர்களுக்கும் இடையில் அதிகாரம் தொடர்பான மோதல்கள் ஏற்பட்டமை.
பிரிசுத்த உரோமப் பேரரசர்களாக விளங்கிய 1ம் பேர்டினனும் (1556-1564) மக்சிமிலியனும் (1564-1576) இவர்கள் மிதவாதிகளாக இருந்ததுடன், இரு தரப்பிலும்அமைதியை ஏற்படுத்த முயற்சித்தனர் இதனை புரட்டஸ்தாந்து இளவரசர்களும் ஆதரித்தனர். இதனால் ஒக்ஸ்பேர்க் உடன்படிக்கையின் பின்னர் ஐரோப்பாவில் யுத்தம் ஒன்று ஏற்படுவது தடைப்பட்ட போதிலும் பின்வந்த காலப்பகுதியில் ஏற்பட்ட நிகழ்வுகளால் அதிகாரம் தொடர்பான மோதல்களில் பரிசுத்த உரோமப் பேரரசர்களுடன் புரட்டஸ்தாந்து இளவரசர்கள் ஈடுபட வேண்டியிருந்தது. இதனால் ஜேர்மனிய புரட்டஸ்தாந்து அரசுகள் பரிசுத்த உரோமப் பேரரசுடன் தமது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள மோதவேண்டியிருந்தது.
3. பிரான்ஸின் பூர்போன் வம்சத்துக்கும், ஜேர்மனியின் ஹஸ்பேர்க் வம்சத்துக்கும் இடையில் அதிகார மோதல் ஏற்படல்.
1555 ஒக்ஸ்பேர்க் பொருத்தனையால் மத்திய அரசின் கட்டுப்பாடு நீங்கியதுடன் ஜேர்மனியில் அரசில் ஒருமைப்பாடு இல்லாது போனது இதனால் ஜேர்மனியின் அயலில் இருந்த நாடுகள் ஜேர்மனை கைப்பற்றிக் கொள்வதில் ஆர்வம் காட்டின. அந்தவகையில் பிரான்ஸின் பூர்போன் வம்சத்துக்கும், ஜேர்மனியின் ஹஸ்பேர்க் வம்சத்துக்கும் இடையில் அதிகார மோதலில் பிரான்ஸ் தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள சமயப்போருக்கு உதவியது. குறிப்பாக 1635 இன் பின்னர் கார்டினல் ரிச்சலியுவின் காலத்தில் பிரான்ஸ் முப்பதாண்டுப்போரில் நேரடியாக பங்கெடுக்கத் தொடங்கியதுடன் சுவீடன், ஒல்லாந்து போன்ற நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டது. இதனால் முப்பதாண்டுப் போரின் இறுதிக் காலம் பூர்போன், ஹஸ்பேர்க் வம்சத்தினருக்கு இடையேயான போராகவே அமைந்தது எனலாம்
4. ஜேர்மனியில் சுதந்திர ஆட்சியாளர்களிடையே மோதல் ஏற்படல்.
ஜேர்மனியில் காணப்பட்ட அரசுகளிடையே சமயத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய பிரிவினையினால் அங்கு அரசியல் ஒன்றுமையை ஏற்படுத்த முடியாது போனது. அரசர்கள் அடிக்கடி போரில் ஈடுபட்டு வந்தனர். பெலடைன், பவேரிய போன்ற நாடுகளின் தலைமையில் அங்கு உருவாகிய புதிய கூட்டுறவுகள் ஜேர்மனியில் போர்ப் பதற்றத்தை அதிகரித்தது.
பொருளாதாரக் காரணங்கள்
1. முப்பதாண்டு யுத்தத்தில் இணைந்து கொண்ட பிரான்ஸின் பிரதான நோக்கம் ஜேர்மனியின் பொருளாதார வளமிக்க நிலங்களின் மீதே இருந்தது.
இதனாலேயே கத்தோலிக்கரால் பாதிக்கப்பட்ட புரட்டஸ்தாந்து மக்களுக்கு உதவுவதாகக் கூறிக்கொண்டு யுத்தத்தில் ஈடுபட்டு ஜேர்மனியை யுத்த பூமியாக மாற்றினர். அத்துடன் ஜேர்மனி தன்னிடம் இருந்த வளங்களைக் கொண்டு ஒரு வல்லரசாக மாற்றமடைவதையும் பிரான்ஸ் விரும்பவில்லை. 1624ல் பிரான்ஸ் அரசாங்கம் ரிச்சலியூவின் கைக்குமாறியதிலிருந்து ஜேர்மனின் வளர்ச்சியை தடை செய்வதிலும் அந்நாட்டின் வளங்களிலும் கூடிய கவனம் செலுத்தினார்.
2. டென்மார்க் ஜேர்மனியின் சுதந்திர அரசர்களுடன் வர்த்தக உறவினை ஏற்படுத்திக் கொள்ள முயன்றமை.
3. போல்டிக் கடலின் வர்த்தக ஆதிக்கத்தினை சுவீடன் பெற விரும்பியமை
பால்டிக் கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட எதிர்பார்த்திருந்த சுவீடன் அரசன் கஸ்டவஸ் அடொல்ப்ஸ் என்பவனுக்கு கத்தோலிக்க படையினர் முன்னேற்றம் பயத்தை உண்டுபண்ணியது காரணம் கத்தோலிக்க அரசான போலந்தின் அரச வம்சத்துக்கு சுவீடன் மீது உரிமை இருச்தது. இதனால் கத்தோலி;க்கரின் முன்னேற்றத்தை தடுத்து பால்டிக் கடலின் ஆதிக்கத்தை பெற்றுக் கொள்ளும் வகையில் முப்பதாண்டுப் போரில் குதித்தான்.
முப்பதாண்டுப் போரின் முக்கிய கட்டங்கள்
பொஹிமியா பெலடைன் காலப்பகுதி (1618 – 1623)
இக்காலத்தில் கத்தோலிக்க அரசுகள் 1619ல் 2ம்பேர்டினனின் கைகளுக்கு மாறியது (ஜேசுயிட் குருமாரால் வளர்க்கப்பட்டவன்) புரட்டஸ்தாந்து மதத்தவரை அடக்க திடசித்தம் கொண்டான். இதே வேளை பெலடைன் எனும் பகுதியை ஆண்டு வந்த பிரடரிக் (கல்வின் சமயவாதி) இளவரசனை பொஹீமிய கிளர்ச்சியாளர்கள் 1916ல் அரசனாக்கினர். இவன் புரட்டஸ்தாந்தவருக்கு தலைமை வகித்தான். இக்காலத்தில் நடந்த படை யெடுப்பில் படையெடுப்பில் ரில்லி எனும் தளபதியின் தலைமையில் சென்ற படைகள் 1620ல் பொஹீமியாவுட் புகுந்து பிரடிக்கை தோற்கடித்தது மட்டுமல்லாமல் பிரடிக்கின் ஏனைய நாடுகளையும் கைப்பற்றியது. இதனால் பிரடரிக் மன்னன் ஒல்லாந்துக்கு தப்பியோடினான்.
புரட்டஸ்தாந்தர் துன்புறுவதைக் கண்ட ஐரோப்பிய புரட்டஸ்தாந்து அரசுகள் (இங்கிலாந்து, ஒல்லாந்து, சுவீடன், டென்மார்க்) போரில் தலையிடத் தொடங்கின.
டென்மார்க் காலப்பகுதி (1625 – 1629)
இக்காலகட்டத்தில் டென்மார்க் அரசன் 4ம் கிரிஷ்டின் புரட்டஸ்தாந்து படைகளுக்கு தலைமையை ஏற்றான். மான்ஸ் பீஸ்ட் என்பவன் புரட்டஸ்தாந்து படைகளுக்கு தளபதியானதுடன். ரில்லி என்பவனை விடச் சிறந்த வெலன்ரீன் கத்தோலிக்க படைகளுக்கு தலைமைதாங்கினான். இப்போரில் மான்ஸ் பீஸ்ட் தோற்கடிக்கப்ப பட்டதால் 1629ல் சக்கரவர்த்தி பேர்டினன் கிரிஸ்டீனுடன் லூபெக் ஒப்பந்தம் செய்தான். இவ் ஒப்பந்தப்படி மன்னன் கிரிஷ்டின் ஜெர்மனிய புரட்டஸ்தாந்தரை விட்டு நீங்க ஒத்துக் கொண்டான்.
சுவீடன் காலப்பகுதி (1630-1635)
பால்டிக் கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட எதிர்பார்த்திருந்த சுவீடன் அரசன் கஸ்டவஸ் அடொல்ப்ஸ் என்பவனுக்கு கத்தோலிக்க படையின் முன்னேற்றம் பயத்தை உண்டுபண்ண அவன் போரில் இறங்கினான். கஸ்டவஸ் அடொல்ப்ஸின் படைகள் ரில்லி, வெலன்ரீன் ஆகிய கத்தோலிக்க தளபதிகளை தோற்கடித்து போரில் மகத்தான வெற்றிகளைப் பெற்று முன்னேறியது.
1624ல் பிரான்ஸ் அரசாங்கம் ரிச்சலியூவின் கைக்கு மாறியதிலிருந்து பிரான்ஸ் ஜேர்மனியின் வளர்ச்சியை தடை செய்யும் நோக்கில் ஜேர்மனிய விவகாரங்களில் கூடிய கவனம் செலுத்தத் தொடங்கியது. ஜேர்மன் வல்லரசாக ஆக்கப்படுவது பிரான்ஸின் நலன்களை பாதிக்கும் என எண்ணியதால் பார்வால்டீ ஒப்பந்தம் (1631) மூலம் பிரான்ஸ் ஆண்டுதோரும் பெருந்தொகை பணத்தை சுவீடன் அரசருக்கு வழங்கி ஜேர்மனுக்கு எதிரான போரில் சுவீடனுக்கு உதவ இணங்கியது.
ஆயினும் கஸ்டவஸ் அடொல்ப்ஸ் போரின் இடையில் இறக்க நேர்ந்ததால் புரட்டஸ்தாந்து படைகளால் பூரண வெற்றியை பெறமுடியாது போனது.
பிரான்ஸிய காலகட்டம் (1635-1648)
இக்காலகட்டத்தில் பிரான்ஸ் சுவீடனுக்கு உதவுவதாகக் கூறி யுத்தத்தில் இறங்கியது. ஆயினும் அவ்விரு நாடுகளின் உண்மையான கவனம் நிலங்களிலும் ஆட்சி அதிகாரத்திலுமே இருந்தது. 1635ன் பின் பிரான்ஸ் நாட்டின் மந்திரியும் கத்தோலிக்க கர்டினாலுமான கார்டினல் ரிச்சலியுவின் யுத்தத்தில் பிரான்ஸின் பங்கை அதிகரித்தார். ஹஸ்பேர்க் வம்சத்தினரை கட்டுப்படுத்துவதே கார்டினல் ரிச்சலியுவின் உண்மை நோக்கமாக இருந்தது. இதற்காக சுவீடன், ஒல்லாந்துடன் நல்லுறவுடன் செயற்பட்டார்.
1642ல் கார்டினல் ரிச்சலியு இறந்தபின் அவரைப்போல் திறமைவாய்ந்த மசாரின் என்பவர் மந்திரியானார். அவ்வாறே 2ம் பேர்டினென்ட்டின் பின்னர் ஆட்சிக்கு 3ம் பேர்டினன்டும் ஆட்சிக்கு வந்தனர். யுத்தம் தொடர்வதை விரும்பாத இவர்கள் சமாதானத்தை ஏற்படுத்த விரும்பியதால் ஏற்பட்ட பல்வேறு பேச்சுவார்த்தைகளின் பின் வெஸ்பாலியா சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
வெஸ்ட்பாலியா உடன்படிக்கை.
ஐரோப்பாவில் ஜேர்மனியை தளமாகக் கொண்டு கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து அரசுகள் முப்பது ஆண்டுகளாக (1618-1648) மேற்கொண்டுவந்த போராட்டமானது பல்வேறு கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் என்பவற்றினைத் தொடர்ந்து வெஸ்ட்பாலியா மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட வெஸ்ட்பாலியா சமாதான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து (1648) முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. இவ் வெஸ்ட்பாலியா மாநாட்டில் இங்கிலாந்து, ரஸ்யா ஆகிய நாடுகளைத் தவிர்ந்த ஏனைய சிறிய, பெரிய ஐரோப்பிய அரசுகள் யாவும் கலந்து கொண்டன.
வெஸ்ட்பாலியா உடன்படிக்கையானது பின்வரும் பிரதான விடயங்களைக் கொண்டிருந்தது.
1. 1555ல் ஒக்ஸ்பேர்க் சமாதான உடன்படிக்கை மூலம் ஏற்படுத்தப்பட்ட ஆட்சியாளனின் மதமே மக்களின் மதமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பது உறுதிசெய்யப்பட்டது.
2. கல்வின் சமயம் சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டதால் லூதர் சமயிகளுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் கல்வின் சமயவாதிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இதனால் கத்தேலிக்கம், லூதரிஸம், கல்வினியம் என்பன சட்டப்படியான மதங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.
3. ஜேர்மனின் மத்திய அரசு பலமிழந்து கிளையாட்சிகள் வழுப்பெற வாய்ப்பு ஏற்பட்டது. இது அரசியல் நில உடைமையில் பல மாறுதலை உண்டுபண்ணியது. புனித உரோமப் பேரரசின் மன்னருக்குரிய பல உரிமைகள் இவ் உடன்படிக்கையின் பின்னர் ஜேர்மனிய இளவரசர்களுக்கு கிடைத்தது. இதனால் ஜேர்மனிய இளவரசர்கள் சுயாதீனத்தை பெற்றுக் கொண்டனர்.
4. இளவரசர் தம்முள்ளும் ஏனைய அந்நிய அரசுகளுடனும் நட்புறவு கொள்ள உரிமை வழங்கப்பட்டது. இதனால் ஜேர்மனின் ஒருமுகப்படுத்தப்பட்ட ஆட்சி இல்லாது போனது. ஆற்றல் வாய்ந்த ஐரோப்பிய அரசு எனும் பெருமையை ஜேர்மன் இழந்தது 300க்கு மேற்பட்ட நாடுகளாயின. ஜேர்மன் பிரதேசங்கள் நிலம் சம்மந்தமான சலுகைகள் பற்றி ஆராய்ந்து வரையறுத்துக் கொண்டது.
5. புனித உரோமப் பேரரசன் 3ம் பேர்டினன் பெற்றிருந்த அதிகாரங்கள் பல குறைக்கப்பட்டதுடன் பேரரசனின் பதவி பெயரளவானதாக மாறியது.
6. போரில் வெற்றிபெற்ற சுவீடனும் பிரான்சும் பல நிலங்களை பெற்றன. சுவீடன் பொமரேனியாவின் மேற்குப் பகுதியை பெற்றது, ப்ரீமன், வேர்டன் ஆகிய சமயத் தலைவரின் கீழ் இருந்த ஆட்சி மாவட்டங்களையும் தன் உடைமையாக்கியது. இதனால் ஓடர், எல்ப், வீசர் ஆகிய நதிகளின் சங்கமத்தில் தன்னை ஒரு பாதுகாப்பாளனாக நிலைநிறுத்திக் கொண்டது. இத்துடன் ஜேர்மனியின் கடல்சார்ந்த நாடுகளையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்து கடல் வர்த்தகத்தில் சுவீடனால் வெற்றிபெற முடிந்தது.
பிரான்ஸ் சமயத் தலைவர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த மெட்ஸ், டூல், வெர்டுன் என்பவற்றையும் அல்சேஸ் லொரேனின் பெரும் பகுதியையும் பெற்றது. இதனால் ரைன் நதியின் வடக்கே பெரும் ஆதிக்கம் செலுத்தியது.
7. சாக்சனியின் முக்கியம் குறைக்கப்பட்ட பிராண்டன்பேர்க் முக்கியம் பெறல். லூதர் காலத்திலிருந்து வடஜேர்மனியின் சாக்சனி முக்கியம் பெற்றாலும் வெஸ்போலியா உடன்படிக்கையின்படி புரட்டஸ்தாந்தினருக்கு பிரண்டன்பேர்க் தலைமை தாங்கியது. இதன் இளவரசன் பொமரேனியாவின் கிழக்கு பகுதியையும் பெற்றுக் கொண்டான்.
8. ஜேர்மனிய வல்லரசு கூட்டமைப்பின் உறுப்பினரான சுவிஸ்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.
9. இவ் உடன்படிக்கை லௌகீக அரசு பற்றிய தோற்றத்திற்கு வழிவகுத்தது.
10. இவ்வுடன்படிக்கை மூலம் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட எல்லைகள் 1786 வரையில் மாற்றம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஐரோப்பாவில் நீண்ட காலத்திற்கு சமாதானம் நிலவ இவ்வொப்பந்தம் காரணமாகியது.
முப்பதாண்டுப் போரின் விளைவுகள்.
1. முப்பதாண்டுப்போரில் புனித உரோமப் பேரரசன் வெற்றி பெறாமையினால் பேரரசனின் நிலை பெயரளவானதாக மாறியது.
2. பாப்பரசரின் அரசியல் ரீதியான ஆதிக்கம் குறைந்து கத்தேலிக்க சமயத்தில் பாப்பரசரின் ஆதிக்கம் மீண்டும் வலுப்பெற்றது.
3. கிறிஸ்தவ சமயத்தில் ஏற்பட்ட பிளவுகள் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டன.
4. ஐரோப்பாவில் நடந்த சமய போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அரைநூற்றாண்டாக மத அடிப்படையில் ஐரோப்பாவில் நிகழ்ந்த போர்கள் முப்பதாண்டு போரை முடிவுக்கு கொண்டுவர வெஸ்ட்பாலியா உடன்படிக்கை சிறந்த அடித்தளமாக அமைந்தது.
5. ஜேர்மனியின் ஹஸ்பேர்க் வம்சம் அதிகாரத்தை இழந்து பிரான்ஸின் பூர்பேர்ன் அரச வம்சம் ஆதிக்கம் செலுத்த முப்பதாண்டுப்போர் உதவியதால் ஐரோப்பாவின் பலம்வாய்த அரசொன்றாக மாற்றமுற பிரான்ஸிற்கு முடிந்தது.
6. ஜேர்மனிய பிரதேச அரசுகள் பலம்பெற்று 300க்கு மேற்பட்ட தனித்தனி அரசுகள் தோற்றம் பெற்றமையால் ஜேர்மனில் ஐக்கியப்படுத்தப்பட்ட ஆட்சிமுறை ஒன்று தோன்றுவதற்கு நீண்ட காலம் ஏற்பட்டது.
7. சுவீடன் போல்டிக் கடல் வர்த்தக ஆதிக்கத்தினை பெற்றுக் கொண்டது.
8. ஜேர்மனிய வல்லரசு கூட்டமைப்பின் உறுப்பினரான சுவிஸ்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. சமயப் போர்கள் முற்றுப்பெற்றாலும் நாடுகளுக்கு இடையிலான அரசியல் போர்கள் ஏற்பட வெஸ்பாலியா உடன்படிக்கை காரணமாக அமைந்தது.
9. வரையறுக்கப்படட தேசிய எல்லைகளைக் கொண்ட தேசிய அரசுகளின் தோற்றத்துக்கு முப்பதாண்டுப்போர் வழிவகுத்தது.
மேலதிக வாசிப்புக்குரிய நூல்கள்
1. ஐரோப்பிய வரலாறு – பேடினன்ட் ஷெவில்
2. நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், இரண்டாம் பாகம் - பேராசிரியர் எஸ்.ஏ.பேக்மன், ஜி.ஸி.மெண்டிஸ்
3. உலக சரித்திரம் 1500 – 1948, மு.இளையதம்பி
அற்புதமான பதிவு
ReplyDelete