இத்தாலியின் ஜெனோவா குடியரசில் கார்சிகா தீவில் அஜாகியோ (Ajacio) எனுமிடத்தில் 1769 ஆகஸ்ட் 15ல் பிறந்தார். இவரது தாய் லேடீசியா ரோமாலினோ (Letizia Romalino), தந்தை கார்லோ போர்னபார்ட். (CarloBonararte) கார்சிகா(Corsica)தீவில் ஏற்பட்ட புரட்சியை அடக்க முடியாத ஜெனோவா குடியரசு அத்தீவை 1768ல் 15ம் லூயி அரசரிடம் கொடுத்ததால் அது லூயி அரசரின் தீவானது. தனது 10 வயது வரை பிரையன்-இலும் பின் பரிஸ்-ஸிலும் இராணுவப் பயிற்சியினை நெப்போலியன் பெற்றார். பிரான்சில் ரூசோ பற்றிக்கற்ற அவர் கார்சிக்கா தீவை விடுவித்து ஒரு குடியரசாக்க வேண்டும் என எண்ணினார்.
பிரெஞ்சுப் புரட்சியின் ஆரம்பகாலத்தில் பீரங்கிப் படையின் துணை லெப்பினட் ஆனார் நெப்போலியன் தனது 27வது வயதில் 34 வயது நிரம்பிய 2 குழந்தைகளின் தாயான ஜோசபைன் என்பவரைத் திருமணம் செய்தார். 1809ல் விவாகரத்து செய்தார்.
1793 டிசம்பரில் பிரித்தானியரிடமிருந்து டுலான் (Toulon) கைப்பற்றியமை, 1795 அக்டோபர் 5ல் புரட்சியாளர்களிடம் இருந்து தேசிய கன்வென்சனைக் காற்பாற்றியமை என்பவற்றால் நெப்போலியனின் புகழ் இத்தாலியில் அதிகரித்தது.
நெப்போலியனின் வெற்றிகளும் பிரான்சிய அதிகாரத்தைக் கைப்பற்றலும்.
ஆஸ்திரியா மீது படையெடுக்க மோரியோ(Moreau) மற்றும் ஜோர்டன்(Jourdan) ஆகியோரின் தலைமையில் பிரான்சுப் படை ஒன்றினை டைரக்டரி அனுப்பியது. அப்படைக்கு உதவ நெப்போலியன் தலைமையிலும் ஒரு படை அனுப்பப்பட்டது. நெப்போலியன் மொன்டேவிப் போரில் (Battle of Mondovi) ஆஸ்திரியாவிலிருந்து சார்டீனியாவைப் பிரித்து,ஏப்ரல் 28 1796ல் சார்டீனியாவை ச்செராஸ்கோ போர்நிறுத்த உடன்பாட்டை (Armistice of Cherasco) ஏற்கச் செய்தார்.
1796 மே 10ல் லோடி(Lodi), 1797 ஜனவரி 14ல் ரிவோலி(Battle of Rivoli) போன்ற இடங்களில் நடைபெற்ற போர்களில் ஆஸ்திரியர்களை தோற்கடித்தார் நெப்போலியன். இத்தோல்விகளால் அஞ்சிய ஆஸ்திரிய பேரரசன் பிரான்ஸிஸ் என்பவர் கெம்போ ஃபோர்மியோ (Campo Formio) எனுமிடத்தில் 1797 அக்டோபர் 17ல் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். இதனால்:
றைன் நதி பிரான்சின் எல்லையானது.
ஆஸ்திரிய நெதர்லாந்து பிரான்சிக்கு சொந்தமானது.
இவ்வெற்றிகளின் பின் நாடுதிரும்பிய இவரின் புகழ் நாட்டில் உயர்வதை விரும்பாத டைரக்டரி இங்கிலாந்துக்கு படையெடுக்கும் பணியினை இவரிடம் வழங்கி நாட்டைவிட்டு அனுப்ப எண்ணியது. இங்கிலாந்து மீது படையெடுக்கக்கூடிய கடற்படை வல்லமை பிரித்தானியாவிடம் இல்லை என்பதை உணர்ந்த நெப்போலியன் பிரித்தானியாவின் இந்தியாவுடனான வர்த்தக் தொடர்பினைத் துண்டிக்கும் வகையில்முதலில் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டிலிருந்த எகிப்தை கைப்பற்ற தயாரானார். டுலான்-ஐக் கடந்த நெப்போலியனிடத்தில் 1798 யூன் 11ல் மால்டா சரணடைந்தது. பின் கெய்ரோ நோக்கி முன்னோறிய அவர் பிரமிட் யுத்தத்தில் (Battle of Pyramids) வெற்றிபெற்று 1798 யூலை 21 எகிப்தைக் கைப்பற்றினார்.
ஆனால் அபங்கிர் வளைகுடாவில் (Aboukir Bay) நிறுத்திவைக்கப்பட்டிருந்த பிரஞ்சுக் கடற்படையை பிரித்தானிய தளபதி நெல்சன் நைல்நதிப் போரில் (Battle of Nile) 1798 யூலையில் தோற்கடித்ததால் அங்கிருந்து தப்பித்து 1799 அக்டோபர் 9ல் தன் நாடு திரும்ப வேண்டி ஏற்பட்டது. இக்காலத்தில் பிரான்ஸின் டைரக்டரியின் ஆட்சியிலும் குழப்பங்கள் சூழ்ந்து கொள்ளத் தொடங்கின.
மூவராட்சிஃப்ரூமைர் திடீர்ப் புரட்சி ஃ18ம் நாள் திடீர்ப் புரட்சி. - 1799
இதனால் இயக்குனர் சபையின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர பழமை அவையிலிருந்து (Council of Ancients) மிதவாதிகளுடன் இணைந்து அபே சீயேஸ் (Abbe Sieyes) சதித்திட்டம் ஒன்றினை தீட்டினார். இத்திட்டத்தில் தன்னையும் சேர்த்துக் கொண்ட நெப்போலியன் ஐநூற்றுவர் சபையின் (Council of Five hundred) தலைவரான தன் சகோதரர் லூசியென் (Lucien) என்பவரின் உதவியையும் பெற்றுக் கொண்டு அரசியலமைப்பை மாற்றி மூன்று இயக்குனர்களைக் கொண்ட மூவராட்சியை (Triumvirate) உருவாக்கினார் (நெப்போலியன், சீயெஸ், டுகாஸ்)
இம்மாற்றம் பிரஞ்சு நாட்காட்டியின் ப்ரூமைர் (Brumaire) 18ம் நாள் (நவம்பர் 10 1799) நடை பெற்றதால் ப்ரூமைர் திடீர்ப் புரட்சி 18ம் நாள் திடிர்ப் புரட்சி எனவும் அழைக்கப்பட்டது.
புதிய அரசியலமைப்பு
நெப்போலியன் ஆதரவுடன் விரைவிலேயே புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. அவ்வரசியலமைப்பின் படி:
நாட்டின் நிர்வாக அதிகாரம் மூன்று கான்சல்களைக் கொண்ட ஒரு கான்சலேட் (Consulate)இடம் வழங்கப்பட்டது.
முதல் கான்சலான(Consul) நெப்போலியன் இராணுவம் உட்பட அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருந்தார்,
கேம்பேசெர்ஸ் (Cambaceres), லெப்ரூன் (Lebrun) ஆகியோர் துணைக் கான்சல்களாவர்.
சட்டமன்றமானது 4 சபைகளைக் கொண்டிருச்தது. (Council of State, the Tribunate, the Legislative, the Senat)
புதிய அரசியலமைப்பானது மக்களின் சம்மதத்தை பெற வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது அதை 3012000 ஆதரித்ததுடன் வெறும் 1562 பேரே அதனை எதிர்த்தனர். இதனால்முதல் கான்சலராக நெப்போலியன் 1802ல் தன்னை நிரந்தரக் கன்சலராக ஆக்கிக் கொண்டார்.
முதல் கன்சலர் 1804 மே 18ல் செனட் உத்தரவுப்படி பிரஞ்சுப் பேரரசன் (Emperor of the French) எனும் பட்டத்தையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து பரீஸ் வந்த பாப்பரசர் 7ம் பயஸ் (Pope Pius VII) நாட்டர்டேம் தேவாலயத்தில் நெப்போலியனுக்கும் அவனது மனைவி ஜோசஃபை-னுக்கும் முடி சூட்டிவைத்தார். இதனால் பிரான்சில் குடியாட்சி நீக்கப்பட்டு மீண்டும் முடியாட்சி தோற்றம் பெற்றது.
நெப்போலியனின் வெளிநாட்டுக் யுத்தங்கள்.
நெப்போலியன் கான்சல் ஆனதும்ஆஸ்திரியா, ரஸ்யா, பிரிட்டன் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதில் மேற்படி நாடுகள் நண்பர்களாக விளங்கியதால் அவர்களை பிரித்தெடுக்கும் நோக்கில் ரஸ்ய மன்னர் சார் (Tsar) 1ம் அலெக்சாண்டர்-ஐ நண்பராக்கி கூட்டணியிலிருந்து பிரித்தெடுத்தார்.
ஜேர்மன் வழியாக ஆஸ்திரியா மீது படையெடுக்க மோரியோ (Moreau)-ஐ அனுப்பியதுடன் இத்தாலி வழியாக தானும் ஆஸ்திரியா நோக்கிச் சென்றார். பெர்னாட் கணவாய் (Great St. Bernard Pass) வழியாக ஆல்ப்ஸ் மலைகளைக் கடந்து சென்று மரெங்கோ போரில் (Battle of Marengo) 1800 யூன் 14ல் ஆஸ்திரியர்களை தோற்கடித்த அதே வேளை ஆஸ்திரிய தளபதி ஆர்க் டியூக் ஜோன் என்பவனை மோரியோ தோற்கடித்து வியன்னாவை நெருங்கினார். இதனால் பயந்த ஆஸ்திரிய மன்னன் 1ம் பிரான்சிஸ் உடன் லுனாவில் ஒப்பந்தத்தை (Peace of Luneville) 1801 செப்டொம்பர் 9ல் நெப்போலியன் செய்து கொண்டார்.
ஆஸ்திரியாவின் தோல்வியின் பின்னர் ரஸ்யா ஏனைய நாடுகளான சுவீடன், டென்மார்க் போன்றவற்றுடன் இனைந்து 'ஆயுதம் கொண்ட இரண்டாவது நடுநிலைமை'(Second Armed Neutrality) எனும் கூட்டணியை உருவாக்கிக் கொண்டதுடன் பிரித்தானியா தனித்த விடப்பட்டது.
தொடர்ந்து பல போர்கள் செய்து களைப்புற்ற நெப்போலியன் 1802 மார்ச் 27ல் பிரித்தானியாவுடன் அமைதியைப் பேணும் வகையில் ஆமியென்ஸ் உடன்பாட்டை (Peace of Amiens) செய்து கொண்டார்.இதன் மூலம் பிரிட்டன் கைப்பற்றிய மால்டா தீவு பிரான்சிடம் தரப்பட்டது. ஆயினும் இவ்வமைதி ஒரு ஆண்டு கூட நீடிக்கவில்லை.
போர் நிறுத்தத்தால் ஏற்பட்ட அமைதியைத் தொடர்ந்து பிரான்சின் உள் விவகாரங்களில் நெப்போலியன் கவனம் செலுத்திப பல்வேறு உள்நாட்டு சீர்திருத்தங்களை வங்கி, பொருளாதாரம், கல்வி, சமயம் போன்ற துறைகளில் நெப்போலியன் மேற்கொண்டார்.
இதனிடையில் 1802ல் மேற் கொள்ளப்பட்ட யாப்புத் திருத்தமானது முதல் கன்சலான நெப்போலியனை நிரந்தர கன்சலாக மாற்றியது. இரு வருடங்கள் கழித்து 1804ல் பேரரசராகவும் முடிசூடிக் கொண்டார்.
1800 – 1802 வரை பல்வேறுநாடுகளுடன் ஒப்பந்தங்களையும் நெப்போலியன் செய்து கொண்டார்
1800- ஐக்கிய அமெரிக்காவுடன்
1801-நேப்பிள்ஸ், போத்துக்கல்லுடன்,பாப்பரசருடன்; கன்கார்டட் ஒப்பந்தம்
1802 – துருக்கியுடன் ஒப்பந்தம்
நெப்போலிய யுத்தங்கள் (Napoleonic Wars) 1803-1815
பியட்மாண்டை நெப்போலியன் கைப்பற்றல், சுவிஸ்லாந்தில் நெப்போலியன் மேற் கொண்ட தலையீடு போன்றவற்றால் பிரிட்டன் துருக்கியின் வேண்டுகோளின்படி மால்டா தீவை பிரான்சுக்கு கொடுக்க மறுத்தது. இதனால் ஆமியென்சு உடன்பாட்டை பிரித்தானியா மீறிவிட்டது எனக் கூறிய நெப்போலியன் 1803 மே 18ல் பிரித்தானியா மீது மீண்டும் போர் தொடுத்தார்.
ஆஸ்திரியா மீது போர் - 1805
ஆஸ்திரிய தளபதி மேக் (Mack)ஐ தோற்கடித்து 1805 அக்டோபர் 20ல் உல்ம் (Ulm) நகரில் சரணடையச் செய்தார்.ஆயினும் பிரஞ்சு கடப்படையை 1805 அக்டோபர் 21ல் டிரஃபால்கர் போரில் (Battle of Trafalgar) பிரித்தானிய கடற்படைத் தளபதி நெல்சன் என்பவர் தோற்கடித்தார். இதன் பின் ஆஸ்திரியாவுடன் போரைத் தொடர்ந்த நெப்போலியன் 1805 டிசம்பர் 2ல் அஸ்டர்லிட்ஸ் (Austerlitz) போரில் ஆஸ்திரிய, ரஸ்ய படைகளை வெற்றிபெற்று பிரஸ்பர்க் உடன்படிக்கையை (Treaty of Pressburg) செய்து கொண்டார். இதனால்:
ஆஸ்திரிய இத்தாலிப் பகுதி பிரான்சிற்கு வழங்கப்பட்டது
பிரான்சின் நட்பு நாடான பவேரியாவுக்கு டைரோல், ஜேர்மனியின் பெரும்பகுதி என்பன வழங்கப்பட்டன.
இவ் வெற்றியைத் தொடர்ந்து 1806ல் ஆஸ்திரியா, பிரஸ்யா ஆகிய நாடுகளைத் தவிர்த்து பதினாறு அரசுகளைக் கொண்ட ரைன் கூட்டரசை நெப்போலியன் உருவாக்கியதும் பரிசுத்த உரோமன் பேரரசு உருக்குலைந்தது.அதிகாரத்தை இழந்த புனிய உரோமின் பேரரசன் இரண்டாம் பிரான்ஸிஸ் 1806 ஆகஸ்ட் 6ல் ஆஸ்திரிய ஹங்கேரி பேரரசன் என பட்டம் சூட்டிக் கொண்டார். இதானல் கி.பி 800 முதல் இருந்து வந்த புனித உரோமப் பேரரசன் எனும் பட்டம் ஒழிந்தது.
ரைன் கூட்டரசை உருவாக்கிய நெப்போலியன் அவ்வரசுகளின் பொதுப் பிரச்சினை பற்றிக் கலந்துரையாட ஃப்ராங்க்ஃபர்ட்-ல் டயட் எனும் ஒரு மன்றத்தை உருவாக்கியதுடன் அவ்வரசுகளின் பாதுபாப்பாளராக (Protector) தானே விளங்கினார்.
1806ம் ஆண்டில் பிரித்தானியாவை வெற்றி கொள்ள அதனை பொருளாதார ரீதியில் முடக்க வேண்டும் என எண்ணிய நெப்போலியன் கண்டத் திட்டம் (Continental System) எனும் திட்டத்தை முன்னெடுக்க தயாராயினார்.
பிரஸ்யா தோற்கடிப்பு – 1806
இதனிடையே ரைன் கூட்டாட்சியை விரும்பாத பிரஸ்ய மன்னர் 3ம் பிரடரிக் வில்லியம் பிரான்ஸ் மீது படையெடுத்தார். 1806அக்டோபர் 14ல் ஜினா(Jena), ஆர்ஸ்டட் (Aurstadt) போர்களில் பிரஸ்யாவை தோற்கடித்ததுடன் பிரஸ்ய-ரஸ்ய கூட்டுப்படையானது 1807 பெப்ரவரியில் எய்ல (Eylau) போரில் நெப்போலியனால் தோற்கடிக்கப்பட்டன.
டில்சிட் உடன்பாடு (1807)
1807 யூனில் ஃப்ரைட்லாண்ட் (Friedland) போரில் நெப்போலியன் ரஸ்யாவின் சார் அரசன் 1ம் அலெக்சாண்டரைத் தோற்கடித்தார். இதனால் ரஸ்ய அரசருடன் டில்சிட் உடன்பாடு ஏற்பட்டது. இதனால் ரஸ்யா 5 ஆண்டு காலம் பிரான்சின் நட்பு நாடானதோடு பிரித்தானிய பொருட்களை புறக்கணிக்கவும் ஒப்புக் கொண்டது.டில்சிட்-டில் நெப்போலியனைச் சந்தித்த பிரஸ்ய அரசன் எல்பி நதிக்கு மேற்கில் உள்ள பகுதிகளுடன் பொருந் தொகை பணத்தை பிரான்சிக்கு நட்ட ஈடாக கொடுத்து பிரான்சுடன் சமாதானமானது.
இவ்வாறாக 1807ல் ஐரோப்பாவின் கட்டுப்பாடு பிரானசனிடம் வந்தது.
கண்டத் திட்டம் (Continental System) 1806
1805ல் டிரஃபால்கர் (Trafalgar) போரில் பிரித்தானியரிடம் தோற்ற நெப்போலியன் 'திமிங்கலத்துடன் யானை சண்டையிட முடியாது' கூறி நிலத்தைக் கொண்டு கடலை வெற்றி பெற எண்ணினார். இதற்காக அவர் தீட்டிய திட்டமே கண்டத் திட்டமாகும்.
1806அக்டோபர் 14ல் ஜினா(Jena), ஆர்ஸ்டட் (Aurstadt) போர்களில் பிரஸ்யாவை தோற்கடித்தது பேர்ளினில் நுழைந்த நெப்போலியன் பேர்ளின் ஆணையை (Berlin Decrees) 1806 நவம்பர் 21ல் வெளியிட்டார் இதன்படி:
ஐரோப்பா கண்டத்திலுள்ள எந்தத் துறைமுகமும்; பிரித்தானிய கப்பல்களுக்கு இடம் வழங்கக் கூடாது
பிரான்சின் நட்பு நாடுகள் பிரித்தானியாவுடன் வணிகத் தொடர்புகளை கொள்ளக் கூடாது.
என உத்தரவிடப்பட்டது.
இதற்குப் பதிலாக பிரித்தானியாவும் 1807 ஜனவரி, நவம்பர் மாதங்களில் கவுன்சில் உத்தரவை (Orders in Council) வெளியிட்டது. இதன்படி:
பிரான்ஸ் மற்றும் அதன் ஆதிக்கத்துக்கு உட்பட்ட துறை முகங்களை புறபக்கணித்தல்
அத்துறைமுகங்கள் மூலம் நடுநிலை நாடுகள் வாணிபத் தொடர்புகள் கொள்ளக் கூடாது.
பேர்லின் ஆணைகளை மேலும் வலுவுள்ளதாக்க வார்சோ, மிலான் ஆணைகளை 1807ல் நெப்போலியன் வெளியிட்டார்.இதனால் இவ்விரு நாடுகளும் இணைந்து ஐரோப்பிய வர்த்தகத்தை சீர்குலைத்தன.
கண்டத்திட்டம் தோல்வியுறக் காரணங்கள்.
1. பிரித்தானியா பிரேசில், துருக்கி, பால்டிக் கடலை அண்டிய நாடுகள் போன்றவற்றுடன் பதிய வியாபாரத் தொடர்புகளை ஆரம்பித்தது.
2. தமது வணிகம் பாதிக்கப்படுவதை உணர்ந்த நெப்போலியனின் நட்பு நாடுகள் கண்டத்திட்டத்திலிருந்து விலகியமை.
3. கண்டத்திட்டத்தால் புகையிலை, தேயிலை, சர்க்கரை போன்றன கிடைக்காமல் தவித்த பிரான்ஸிய மக்கள் அவற்றை கள்ளக் கடத்தல் செய்து கொண்டுவந்தமை.
4. பிரான்சிடம் வலுவான கடற்படை காணப்படாமை. பிரித்தானியாவிடம் வலுவான கடற்படை காணப்பட்டமை.
5. ஒட்டோமன் பேரரசு போத்துக்கல், ஸ்பெயின் வழியாக ஐரோப்பாவுக்கு பொருட்களை கொண்டு சென்றமை.
6. பிரித்தானியாவுக்கு சோளம் ஏற்றுமதி செய்ய நெப்போலியன் அனுமதித்ததால் பிரித்தானியா பசியிலிருந்து தப்பித்தது.
தீபகற்பப் போர் (Peninsular War) 1808-1814
கண்டத் திட்டத்தை எதிர்த்த போத்துக்கல் மீது படையெடுத்து போத்துக்கல் அரசன் 1ம் மரியாவை (Maria – I) அத்திட்டத்தை ஏற்கச் செய்ததுடன் திருப்பியடையாத நெப்போலியன் ஜுனார்ட் என்பவனை அனுப்பி போத்துக்கல்லைக் கைப்பற்றினாலும் பிரித்தானியா 1808ல் ஆதர் வெல்லெஸ்லி எனும் தளபதியை அனுப்பி பிரஞ்சுப்படையை தோற்கடித்து அங்கிருந்து வெளியேற்றியது.
கண்டத் திட்டத்தை ஸ்பானியாவும் எதிர்த்த போது நெப்போலியன் இங்கு தனது சகோதரன் ஜோசப் என்பவரை ஸ்பானிய மன்னராக்கினான் (1808 – 1817). இதனை ஸ்பானிய மக்கள் எதிர்த்து கலகங்களை ஏற்படுத்த தலவீரா (Talavera 1808), சலமன்கா (Salamanca 1812) விட்டோரியா (Vittoria 1813) ஆகிய இடங்களில் இடம் பெற்ற போர்களில் பிரித்தானிய தளபதி ஆதர் வெல்லெஸ்லி பிரஞ்சுப் படைகளைத் தோற்கடித்தார். இதனால் ஐபீரியன் தீபகற்பத்திலிருந்து (Iberian Peninsula) பிரான்ஸ் விரட்டப்பட்டது.
ஆஸ்திரியப் புரட்சி
ஐபீரிய தீபகற்ப தோல்வியால் எழுச்சியடைந்த ஆஸ்திரியர் பிரான்சுக்கு எதிராக புரட்சி செய்தனர். ஆனால் வக்ரம் (Wagram) போரில் 1808 யூலையில் ஆஸ்திரியர்களை நெப்போலியன் தோற்கடித்தார். இதன் பின்னர் குழந்தை பெறாத தன் மனைவி ஜோசஃபைன் என்பவளை விவாகரத்துச் செய்து ஆஸ்திரிய மன்னர் 1ம் பிரான்சிஸ்-சின் மகளான மேரி லூசியா (Marie Lousia) என்ற மேரி அன்டானெய்ட்-டை 1810ல் நெப்போலியன் மணந்தார்.
ரஸ்யா எதிர்ப்பு
ரஸ்யா மீது 1812ல் படையெடுத்ததால் அவரது எதிர்ப்பை சமாளிக்க முடியாத ரஸ்யா தனது நிலத்தை சிதைத்துக் கொண்டு போரிடாமல் பின்வாங்கியது (இதனை நிலம் சிதைப்ப கோட்பாடு என்றனர்) பொரோடினோ போரில் (Battle of Borodino) வெற்றிபெற்ற நெப்போலியன் மொஸ்கோவை அடைந்தபின் தான் நெடுந்தூரம் வந்ததை உணர்ந்து 1812 அக்டோபரில் நாடு திரும்பினார். திரும்பும் போது கடுங்குளிராலும், கோசக் (Cossack) இனத்தவராலும் துன்பத்துக்குள்ளான நெப்போலியன் தனது 600,000 படைகளில் 100,000 வீரர்களுடன் மட்டுமே நாடு திரும்பினான்.
நெப்போலியனின் வீழ்ச்சி
ரஸ்யாவில் நெப்போலியன் கண்ட தோல்விகள் அவரது எதிரி நாடுகளை உற்சாகப்படுத்தியது. பிரசியா தலைமையிலான ஜேர்மனிய அரசுகள், பிரித்தானியா, ரஸ்யா, ஆஸ்திரியா போன்றன ஒன்றினைந்து 1813ல் நான்காவது கூட்டணி எனும் கூட்டணியை உருவாக்கினர். இதனால் பயப்படாத நெப்போலியன் தனது இரண்டு இலட்சம் படையுடன் எதிர்க்கத் தயாரானார். ஆயினும்நாடுகளின் போர் எனப்பட்ட (Battle of Nations) லீப்சிக் போரில் (Battle of Leipzig) அக்டோபர் 1813ல் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டதால் பிரான்சிற்குப் பின்வாங்கினார். தொடர்ந்து டுலூஸ் (Toulouse) போரில் 1814ல் வெலிங்டன் தலைமையில் பரிசைக் கைப்பற்றிய கூட்டணிப் படைகள் நெப்போலியனைச் சரணடையச் செய்தன.
சரணடைந்த 1814 ஏப்ரல் 6ல் பதவியை துறக்க வேண்டி ஏற்பட்டது. நெப்போலியன் பேரரசர் என்ற பட்டத்துடனும் ஆண்டுக்கு இரண்டு இலட்சம் பவுண்கள் உதவித் தொகையுடனும் இத்தாலிக்கு மேற்கில் இருந்த எல்பா (Elba) தீவிற்கு அனுப்பப்பட்டார். இதன் பின்னர் 16ம் லூயி-யின் சகோதரன் 18ம் லூயி (1755–1824) பிரான்சின் அரசனாக்கப்பட்டு மீண்டும் பூர்போன் வம்சத்தின் ஆட்சி பிரான்சில் நிறுவப்பட்டது.
பத்து மாத காலம் (1814 ஏப்ரல் - 1815 பெப்ரவரி) எல்பா-வில் தங்கியிருந்த நெப்போலியன் தன் சகாக்கள் 1000 பேருடன் அங்கிருந்து தப்பி பிரான்ஸிய கடலோர நகரான கேனெஸ் (Cannes) வந்து சேரவே அங்கிருந்த படைகளும் நெப்போலியனுடன் இணைந்து கொண்டு அவனை மன்னாக ஏற்றுக் கொண்டன.
பரிஸ் வந்த நெப்போலியன் பெல்ஜியம் நோக்கி முன்னேறினான். அவனை எதிர்க்க வெலிங்டன் பிரபு தலைமையிலான பிரித்தானியப் படையும், புளூச்சர் தலைமையிலான பிரஸ்ய படையும் தயாராயின. லிக்னி (Ligny) போர்க்களத்தில் அப்படைகளை வென்று முன்னேறிய நெப்போலியனின் படையை 1815 யூன் 18ல் வாட்டர்லூ (Waterloo) போரில் வெலிங்டன் தோற்கடித்தார். யூன் 22ல் இரண்டாவது முறையாக பதவிதுறந்த நெப்போலியன் ஆங்கிலேயரிடம் சரணடைந்தார்.
எல்பா தீவிலிருந்து மீண்டும் பிரான்ஸிற்கு வந்த நெப்போலியன் வோட்டர்லூ போரில் தோல்வி அடையும் வரையான காலத்தில் மீண்டும் பிரான்ஸ் மன்னராக இருந்த 100 நாட்கள் 1815 மார்ச் 1 முதல் யூன் 18)'நூறு நாட்கள்' என வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.
ஆங்கிலேயரிடம் சரணடைந்த நெப்போலியன் மீண்டும் தப்பிவிடக்கூடாதென எண்ணிய பிரித்தானியா அமெரிக்காவுக்கும் ஆபிரிக்காவுக்கும் நெடுந் தொலையிலுள்ள பிரித்தானியாவுக்கு சொந்தமான சென் ஹெலனா (SaintuHelena) தீவில் சிறைவைத்தது. அங்கிருந்து தன் நினைவுக் குறிப்புக்களை எழுதுவதில் ஆறு ஆண்டுகள் கழித்த நெப்போலியன் 1821 மே 5ல் தனது 51வது வயதில் இறந்தார்.
நெப்போலியனின் வீழ்ச்சிக்கான காரணங்கள்.
1. கண்டத் திட்டத்தின் தோல்வி – கண்டத்திட்டத்தால் பிரான்சில் பொருட்களின் விலை அதிகரித்ததால் மக்கள் வெறுத்தனர், கண்டத்திட்டத்தை அமுல்ப்படுத்த பாப்பரசரை கைது செய்ய நேர்ந்ததால் கத்தோலிக்கர்கள் வெறுத்தனர்,கண்டத்திட்டத்தை ஏற்கமறுத்த ஸ்பெயின், போத்துக்கல்லுடன் புரிந்த போரில் பிராஸ் தோல்வியுற்றமை போன்றவற்றால் பிரான்ஸ் பலவீனமடைந்தது. இவ்வாறு நெப்போலியன் பிரித்தானியாவை வெற்றி கொள்ளத்தீட்டிய திட்டமே மக்களின் வெறுப்பைப் பெறக் காரணமாக இருந்தாது. மேலும் இதுவே அவனது தோல்விக்கும் காரணமானது.
2. ஸ்பெயினில் நெப்போலியன் கண்ட தோல்வி - ஸ்பானிய மன்னர் நான்காம் சார்ஸ் இறந்ததும் அரியணையை கொடாய் (Goday) கைப்பற்றிக் கொள்வாரோ என நினைத்த பேர்டினன்ட் நெப்போலியனின் உதவியை நாடினான். ஆனால் நெப்போலியனோ இக்காலத்தில் கண்டத்திட்டத்தில் தீவிர கவனம் செலுத்தியதோடு ஸ்பானியாவுக்கு தனது சகோதரன் ஜோசப்-ஐ மன்னராக்கினான். ஆனால் அதை விரும்பாத ஸ்பானியர் கொரிலாப் போர் முறையால் பிரான்சியப் படைகளை எதிர்த்தனர். 1808 ல் ஆரம்பித்த இல்வெதிர்ப்பு ஐந்து ஆண்டுகள் நீடித்ததுடன். இங்கு நெப்போலியன் தனது படைகள் பலவற்றை இழக்க வேண்டியும் ஏற்பட்டதுடன் தன் நேரத்தையும் விரயம் செய்யவேண்டி ஏற்பட்டது. இதனாலேயே நெப்போலியன் 'ஸ்பானியப் புண் (Ulcer) என்னை வீழ்த்திவிட்டது' என்றான் .
3. ரஸ்யா மீதான போரில் நெப்போலியன் அடைந்த தோல்விகள் - 1807 டில்சிட் உடண்படிக்கையின்படி கண்டத்திட்டத்தை ஏற்ற ரஸ்யாவின் அரசர் 1ம் அலெக்சாண்டர் பின்னர் அத்திட்டத்தால் ரஸ்யா பாதிக்கப்பட்டதால் அதனை எதிர்த்தான். இதனால் ரஸ்யாவை 6,00,000 படைகளுடன் ரஸ்யாவை ஆக்கிரமித்த நெப்போலியன் திரும்பும் போது கடுங்குளிராலும், கோசக் (Cossack) இனத்தவராலும் துன்பத்துக்குள்ளாகி தன் படைகளில் 20000 வீரர்களுடன் மட்டுமே நாடு திரும்பினான். இதனால் இரண்டாவது முறையாக தன் பெருமளவு படைகளை இழந்த நெப்போலியன் 'கிரெம்ளினில் 35 நாட்கள் தங்கியது தவறு இரு வாரங்களே தங்கியிருக்க வேண்டும்' ;எனக் கூறினார்.
4. பிரித்தானியாவிடம் காணப்பட்ட கடற்படையின் ஆதிக்கம் - பிரான்சின் தரைப்படையானது வலிமை மிக்க படையாக இருந்தாலும் பரித்தானியா சிறந்த கடற்படையைக் கொண்டிருந்தது. இதனாலேயே'திமிங்கலத்துடன் யானை சண்டையிட முடியாது' கூறி நிலத்தைக் கொண்டு கடலை வெற்றி பெற எண்ணினார் நெப்போலியன். அனாலும் 'நெல்சன், வெலிங்டன் போன்ற தளபதிகளின் கடல் வெற்றிகள் நெப்போலியனின் வீழ்ச்சியைத் துரிதப்படுத்தின.
5. தன் எதிர் நாடுகளின் வலிமையை சரியாக கணிப்பிடத் தவறியமை - ஸ்பானியா, ரஸ்யா போன்ற நாடுகளின் பலம் தொடர்பில் சரியாக மதிப்பிடத் தவறியதுடன் நெப்போலியன் தனது படைபலத்தில் அபார நம்பிக்கை வைத்து படைநடவடிக்கை மேற் கொண்டமையே இலட்சக் கணக்கான தன் படைகளை இழக்கக் காரணமானது.
6. திறமையற்ற தன் உறவினர்களுக்கு பதவிகளை வழங்கியமை - நேப்பில்ஸ் இராச்சியத்தில் ஆட்சி செய்த பூர்பன் வம்சத்தவன் 7ம் பேர்டினான்டை நீக்கிவிட்டு தன் சகோதரன் ஜோசப் போனபாட்டை அரசனாக்கியமை, மற்றொறு சகோதரன் ஜெரோம் என்பவனை வெஸ்ட்ஃபாலியாவின் மன்னனாக்கினான், மற்றொரு சகோதரன் லூயியை ஒல்லாந்தின் அரசனாகவும், தங்கை எலிஸெ (Elise)யை லூகாவின் அரசியாகவும் நெக்போலியன் அமர்த்தினாலும் இவர்களின் திறமையீனத்தால் நெப்போலியனே பாதிக்கப்பட்டான். இதனாலேயே 'என் உறவினர்களுக்கு நான் செய்த நன்மைகளை விட அவர்கள் எனக்குசெய்த தீமைகளே அதிகம்' என 1810ல் மெட்டர்னிக்கிடம் நெப்போலியன் கூறினார்.
7. பாப்பரசரை கைது செய்ததால் கத்தோலிக்க மக்கள் அவனை வெறுத்தனர் - கண்டத்திட்டத்தை அமுல்ப்படுத்த பாப்பரசர் 7ம் பயஸ்-ஐ கைது செய்ய நேர்ந்ததால் கத்தோலிக்கர்கள் நெப்Nபுhலியனை வெறுத்தனர்.
8. பிரஸ்ய, பிரித்டதானிய தளபதிகளின் வெற்றிகள் - நீசினோ (Gneisenau) ப்ளூச்சர் (Blucher) போன்ற பிரஸ்ய தளபதிகளினதும், நெல்சன், வெலிங்டன் ஆகிய பிரித்தானிய தளபதிகளினதும் நெப்போலியனின் படைகளுக்கு எதிரான சிறந்த வெற்றிகள் நெப்போலியனின் வீழ்ச்சியை துரிதப்படுத்தியது.
9. நெப்போலியனின் பேராசைகள் - ஐரோப்பா முழுவதையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துவிட வேண்டும ;என்ற பேராசையே நெப்போலியனை தொடர்ச்சியான போரிற்கு துண்டியது எனலாம். இதனால் ஐரோப்பிய நாடுகள் நெப்போலியனுக்கு எதிராக கூட்டாக போரிட்டு அவனைத் தொற்கடித்தன.
10. நெப்போலியனால் உருவாக்கப்பட்ட தேசியவாத கருத்துக்கள் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் பரவியதால் அந்நாடுகளும் பலமடைந்தபோது அது நெப்Nபுhலியனுக்கு ஆபத்தானது.
11. நெப்போலியனின் பேரரசு பரந்து காணப்பட்டமையால் அவற்றை தனி ஒருவனாக இருந்து நிருவாகம் செய்வதற்கு நெப்போலியனால் முடியாது போனது.
12. நெப்போலியனின் இராணுவத்தினர் தொடர்ந்தும் யுத்தங்களை சந்தித்தமையால் சலிப்படைந்ததுடன், இராணுவத்தினருள்ளும் பல மோதல்கள் ஏற்பட்டமை.
13. ஐரோப்பாவின் முக்கிய நாடுகள் கூட்டிணைந்து நெப்போலியனின் படையை தாக்கியதால் நெப்போலியனின் தனிப்படையினால் ஐரோப்பிய நாடுகளின் கூட்டுப்படையை சமாளிக்க முடியாது போனது.
//நெப்போலியனின் பேரரசு பரந்து காணப்பட்டமையால் அவற்றை தனி ஒருவனாக இருந்து நிருவாகம் செய்வதற்கு நெப்போலியனால் முடியாது போனது//.
ReplyDeleteநெப்போலியன் தொடர்ந்து வெற்றிபெறாமல் வீழ்ந்ததற்கு மேற்குறிப்பிட்ட காரணமே மிக முக்கியமானதாக இருக்கலாம்...
Nanjil Siva.