Skip to main content

கலிங்க மாகவின் ஆக்கிரமிப்பு

பராக்கிரம பாண்டியனின் ஆட்சிக்காலம், பொலன்னறுவை இராச்சியத்தின் முடிவைக் குறிக்கிறது, அதாவது கிறிஸ்துவுக்கு பின் 1215 ல் கலிங்க மாகவின் கொடூரமான படையெடுப்பிற்குப் பிறகு, 17 நூற்றாண்டுகளாக செயற்பட்ட ரஜரட்ட நாகரிகமும் முடிவுக்கு வந்தது. இருபத்தி நாலாயிரம் கேரள (சேர) படையைக் கொண்டுவந்து,  பொலன்னறுவையின் கடைசி மன்னன் பராக்கிரம பாண்டியன் (கிறிஸ்துவுக்கு பின் 1212 - 1215) என்பவனைக் கைது செய்து, கண்களை குருடாக்கி கொன்று அழித்ததை மகாவம்சத்தின் இரண்டாம் பாகம் பதிவு செய்துள்ளது. நாட்டின் மீது படையெடுத்த மற்ற படையெடுப்பாளர்களுடன் ஒப்பிடும்போது கலிங்க மாக மிகவும் வன்முறை மிக்க மற்றும் கொடூரமான படையெடுப்பாளர் ஆவார். ராசரட்ட ராஜ்ஜியத்தின் நாகரீகத்திற்கு அவர் செய்த அழிவு கொஞ்சநஞ்சமல்ல. அவரது நேரடித் தாக்குதல் நாட்டின் பொருளாதாரத்தின் மீது மட்டுமல்ல, கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் மீதும் இருந்தது. 

மாக கலிங்க தேசத்திலிருந்து படையெடுத்தார், இது இன்றைய இந்தியாவின் "ஒரிசா" ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை ஒட்டிய ஒரிசா, இலங்கையுடன் நீண்டகாலமாக நட்புறவைக் கொண்ட பிரதேசமாகும். பொலன்னறுவை காலத்தில் ஆட்சி செய்த அரசன் நிஷ்ஷங்கமல்லன் என்பவனும் கலிங்க குலத்தவனாக இருந்தான்

மாகவின் ஆக்கிரமிப்பினால் ஏற்பட்ட அழிவுபற்றி மகாவம்சத்தின் இரண்டாம் பாகம் இவ்வாறு விபரிக்கிறது. “தாங்கள் கேரளாவின் ராட்சதர்கள்” என்று தம்பட்டம் அடித்தார்கள். இலங்கை மக்களைத் துன்புறுத்தினர். மக்களின் ஆடை, ஆபரணங்களைக் கொள்ளையடித்தனர். நீண்ட காலமாகப் பேணப்பட்டு வந்த குல ஆசாரங்களை இல்லாதொழித்தனர். மக்களின் கால், கைகளை வெட்டினர். மாளிகைகளைத் தரைமட்டமாக்கினர். கால்நடைகளைக் கவர்ந்து கொண்டனர். பொது மக்களைக் கட்டி வைத்து அவர்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்து அவர்களை வறிய நிலைக்குத் தள்ளினர். புத்தர் சிலைகளை உடைத்தொழித்தனர். அதிகளவிலான விகாரைகளை அழித்தனர். விகாரைச் சொத்துக்களைக் கொள்ளையடித்தனர். பக்தர்களைத் தாக்கினர். பிள்ளைகளை அடித்தனர். பொதுமக்களைக் கொண்டு சுமையான பொருள்களைத் தூக்கிச் சென்றனர். அவர்கள் மூலம் அதிகளவிலான வேலைகளை வாங்கினர். பிரபல்யமான நூலேடுகளின் பக்கங்களை பல்வேறு திசைகளிலும் வீசியெறிந்தனர். பழைய மன்னர்களின் புகழைப் பறைசாற்றிக் கொண்டிருந்த ரத்னாவலி முதலிய அலங்கார விகாரைகளையும் அவற்றுள் அடங்கப்பட்டிருந்த புனித தாதுக்களையும் புறக்கணித்து அழித்தனர். பொதுமக்களைப் பொய் மாயைக்குள் சிக்க வைத்து குலங்களுக்கிடையே திருமண உறவுகளை ஏற்படுத்தி தெளிவாயிருந்த நான்கு சாதியினருக்கிடையே கலப்பினை ஏற்படுத்தினர். வீடு, வயல், வளவு, தோட்டம், கால்நடைகள்,கிராமங்கள் என்று சிங்களவர்களின் உடைமைகளைச் சூறையாடி சேரர்களுக்கு கொடுத்தனர். விகாரைகள் பிரிவெனாக்கள் முதலிய கட்டடங்கள் சேரப்படையினரின் வசிப்பிடங்களாயின. பௌத்த பிக்குகளுக்குச் சொந்தமான சொத்துக்களையும் சூறையாடி பாவத்தைத் தேடிக் கொண்டனர். சேர நாட்டுப் படையினர் புத்த சாசனத்தையும் அழித்தனர்" 

மேற்கூறப்பட்ட மகாவம்சத்தின் வரிகள் மாகன் மேற்கொண்ட நடவடிக்கைகளை அறிய உதவுகின்றன. அதிலடங்கியுள்ள விடயங்களை விரிவாக விளக்குவதற்கு அவசியமில்லை. ஆயினும், ஆய்வுக்குட்படுத்த வேண்டிய சில விடயங்களும் அதனுள் அடங்கியுள்ளன. 

1) அதாவது மாகனின் பௌத்த எதிர்ப்புக் கொள்கை அதில் முதலிடம் பெறுகின்றது. அவன் பௌத்த தலங்களை அழித்தது மட்டுமல்ல பிக்குமாருக்கும் சரீர ரீதியிலான தண்டனைகளை வழங்கி அவர்களை சித்திரவதைப்படுத்தினான். 

2) இங்கு அவதானிக்கத் தக்க மற்றொரு விடயம் சிங்களவர்களை பலாத்காரமாக மாற்று மதங்களைத் தழுவச் செய்வதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளாகும். அதற்கான வாசகங்கள் மகாவம்சத்தில் நேரடியாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. அவனால் அழிக்கப்பட்ட புத்தகங்கள் பௌத்த தர்ம நூல்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. மேலும் விகாரைச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பது அவனது நோக்கமாயின. நூல்களை அழிப்பதன் மூலம் அவன் எதிர்பார்த்த பயன் என்னவாக இருக்க முடியும்? இதிலிருந்து தெரிய வருவது என்னவெனில் அவன் ஏனைய சமயங்கள் தொடர்பான சகிப்புத் தன்மையற்ற அடிப்படைவாதியாகும் என்பதே. அதற்கு முன்னர் இலங்கையை ஆக்கிரமித்த எந்தவொரு ஆக்கிரமிப்பாளனும் தமது சமயத்தைப் பொதுமக்கள்மீது பலவந்தமாகத் திணிக்கவில்லை என்பது தெளிவான விடயம். சமயங்களுக்கான உரிமை இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்பட்ட இயல்பாகும். ஆனால் மாகன் அம் மரபை மீறிய ஒரு கொடுங்கோலனாவான்.

3) இங்கு அவதானிக்கப்பட வேண்டிய மற்றொரு அம்சம் யாதெனில் இராசரட்டையின் பிரபுத்துவ வகுப்பினரைக் கொடுமைப்படுத்தியமையாகும். அவர்களிடமிருந்த செல்வங்களைச் சூறையாடி அவர்களை வறியவர்களாக்கிய விபரத்தை மேற்கூறிய வாசகங்கள் மூலம் அறிந்தோம். பிரபுத்துவ வகுப்பினர் என்று இங்கு குறிப்பிடப்பட்டவர்கள் ஏற்கனவே அரச நிர்வாகத்தில் உயர்பதவிகள் வகித்தவர்களாவர். 

4) சாதாரண பொதுமக்களுங் கூட சரீரத் தண்டனைகள் மூலம் இம்சைப்படுத்தப்பட்டனர். சிறுவர்களையும் பிரம்படி முதலிய தண்டனைகளுக்கு ஆளாக்கியமைக்கான காரணம் புரியாத புதிராகவே விளங்குகின்றது. 

5) பரம்பரையாகப் பேணப்பட்டு வந்த குல முறைமையைக் குழப்பி அன்றைய சமூகவமைப்பில் சாதி முறையை சீர்குலைத்தமையும் முக்கிய விடயமாகும். 

6) கொடுமைக்கு ஆளான பௌத்த பிக்குகள் இராசரட்டையைக் கைவிட்டு மாயாரட்ட, உருகுணை, மலைநாட்டுப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இன்னும் பலர் தென்னிந்தியாவின் சேர, சோழ, பாண்டிய நாடுகளிலும் தஞ்சமடைந்தனர். மாகனின் இம்சை பொறுக்க முடியாத இளவரசர்கள், அமைச்சர்கள், பிரதானிகள், அரச குடும்பத்தினர் ஆகியோர் மாயாரட்டை மற்றும் உருகுணைப் பகுதிகளில் பாதுகாப்புக் கருதி குடியேறினர். அதே போலவே சாதாரண மக்களும் இடம் பெயர்ந்துள்ளனர் என்று கருதலாம். 

இவ்வாறான இம்சையான செயற்பாடுகள் மாகனின் ஆட்சிக் காலம் முழுதும் தொடர்ந்ததா? ஆரம்ப காலத்துடன் முடிவடைந்ததா? என்பதை அறிவதற்கான ஆதாரங்கள் இல்லை. பொலன்னறுவையைத் தலைநகராகக் கொண்டு மாகன் மேற்கொண்ட ஆட்சியானது போர்த் தன்மை கொண்டதாகவே விளங்கியது. அவனது போர்ப்படைகளின் ஒழுங்கமைப்பானது சக்தி மிக்கதாகக் காணப்பட்டது. உள்நாட்டில் பொலன்னறுவை, கொட்டசார, கவுடுல்ல, பதவியா, கந்தளாய் முதலிய இடங்களிலும் வடமேல் கரையோரமாக மன்னார், ஊர்காவற்றுறை முதலிய பல இடங்களிலும் அவன் கோட்டைகளை அமைத்து அங்கு படையினரை நிறுத்தியிருந்தான். கரையோரத்தில் கோட்டை அமைத்த காரணம் வெளிநாட்டுப் படையெடுப்புகளைத் தடுப்பதற்காகும் என்பதை இங்கு விபரிக்கப்பட்ட விடயங்களை வைத்தே நாம் விளங்கிக் கொள்ளலாம்."


Comments

Popular posts from this blog

கைத்தொழில் புரட்சி

நவீன உலகினை வடிவமைத்த காரணிகளுள் பல்வேறு புரட்சிகளுக்கு முக்கிய பங்குண்டு. அவற்றுள் கைத்தொழிற் புரட்சியும் முக்கியமான ஒன்றாகும். இது அறிவியல் வளர்ச்சியினால் தொழிற்றுறையில் ஏற்பட்டதோர் விரைவான மாற்றமாகும். 1760 – 1830 வரையான காலத்தில் பிரித்தானியாவின் கைத்தொழிற் துறையில் இத்தகைய பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. கைகளால் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரியமான குடிசைக் கைத்தொழிலுக்கு மாற்றாக இயந்திரங்களின் உதவியுடன் பெரிய தொழிற்சாலைகளில் பாரிய கேள்வியினை பூர்த்தி செய்யும் வகையில் அதிகளவான பொருட்களை உற்பத்தி செய்யும் முறையினை குறிப்பதற்கே கைத்தொழில் புரட்சி எனும் பதமானது 18ம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்படுகிறது.

ஐரோப்பிய மறுமலர்ச்சியும் அதன் விளைவுகளும்

ஐரோப்பாவில் உரோமப் பேரரசின் விழ்ச்சிக்குப் பின்னரானகாலகட்டமானது மானிய முறையினை அடிப்படையாகக் கொண்டிருந்த சமூகப் பொருளாதார அரசியல் அம்சங்களினைக் கொண்டிருந்தது. இக்காலத்தில் மேற்படித் துறைகளில் மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை ஆயினும் கி.பி1300ம் ஆண்டிலிருந்து ஐரோப்பாவில் தோன்றிய ஒரு சீர்திருத்த இயக்கமானது செம்மொழிக் காலத்து இலக்கியம் கலை என்பவற்றை புனர்நிர்மாணம் செய்வதற்கு மேற்கொண்ட முயற்சியினால் கிரேக்க உரோம கலைகளை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பாவின் விஞ்ஞானம் கைத்தொழில் வர்த்தகம் அரசியல் போன்றனவும் புத்தெழுச்சி பெற ஆரம்பித்தன. இது ஐரோப்பாவில் 1500 வரையிலும் நீடித்தது. சில ஐரோப்பிய நாடுகளில் 1550ல் இருந்து 1600 வரைக்கும் நீடித்திருந்தது. இக்காலத்தையே மறுமலர்ச்சிக் காலம் என்கின்றனர்.

ஐரோப்பாவில் ஏற்பட்ட சமய சீர்திருத்தமும் எதிர் சமய சீர்திருத்தங்களும்

ஐரோப்பாவின் நாகரிக வளர்ச்சிக்கு கிறிஸ்தவ சமயமும் கிறிஸ்தவ திருச்சபையும் பெரிதும் உதவியது. இதனால் மத்திய காலத்தில் ஐரோப்பாவில் கிறிஸ்தவ சமயம் செல்வாக்குப்பெற்றதொரு சமயமாக விளங்கினாலும் 15ம் நூற்றாண்டு காலத்தில் 6ம் அலெக்சாந்தர்> 2ம் ஜூலியஸ்> 10ம் லியோ போன்ற பாப்பரசர்களும் கிறிஸ்தவ குருமாரும் உலகியல் நாட்டத்தோடு நடத்திய வாழ்க்கை> இதனால் திருச்சபையானது நிலமானிய முறையில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய தாபனமாக மாற்றமுற்றமை> இவற்றை எதிர்ப்பதற்கான அடித்தளத்தை மறுமலர்ச்சி இயக்கம் உண்டாக்கியமை என்பவற்றினால் 16ம் நூற்றாண்டில் இருந்து கிறிஸ்தவ திருச்சபைக்கு எதிரான ஒரு இயக்கம் தோற்றம் பெறத்தொடங்கியது. இதற்கு மாட்டின் லூதர் தலைமைவகித்தார்.