நாடுகாண் பயணங்களில் முதன்முதலில் ஈடுபட்டவர்கள் போர்ச்சுகல் நாட்டு மக்களேயாவர். ஐரோப்பாவின் தென்மேற்குப் பகுதியில் இருந்த காரணத்தினால், அவர்கள் ஆப்பிரிக்கக் கரையோரப் பகுதிகளை முன்பே நன்கறிந்திருந்தனர். ஆப்பிரிக்கக் கடற் கரையைச் சுற்றிவந்து இந்தியாவை அடையவேண்டும் என்ற முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.
இதுபோன்ற கடல் பயணங்களை ஊக்குவித்து, உற்சாகத்துடன் செயல்பட்டவர் போர்ச்சுகல் நாட்டு 'இளவரசர் ஹென்றி' (Prince Henry, 1394-1460). கடல் பயணங்களில் இவர் காட்டிய ஆர்வம், இது போன்ற செயல்களுக்கு இவர் அளித்த ஆதரவு காரணமாக, இவர் 'மாலுமி ஹென்றி' (Henry the Navigator) என்றழைக்கப் பட்டார். இவர் மாலுமிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கென்று மாலுமிகள் பயிற்சிப் பள்ளி' ஒன்றைத் தொடங்கினார். ஆப்பிரிக்காக் கண்டத்தைச் சுற்றிச்சென்று இந்தியாவை அடைய நேரடிக் கடல்வழியொன்றைக் கண்டுபிடிக்க வேண்டுமென்பது இவரது குறிக்கோள்.
இவருடைய பெருமுயற்சியின் காரணமாக 'அஸோர்ஸ்' (Azores), 'மெடீரா' (Madeira) போன்ற தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டு போர்த்துக்கீசியக் குடியேற்றங்களாக மாறின. 1445-ல் 'காம்பியா' (Gambia), 'செனகல்' (Senegal) ஆகிய நதிகளின் முகத்துவாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. வெர்டி முனைத்தீவுகள்' (Cape Verde Islands) கண்டுபிடிக்கப்பட்டுப் போர்த்துக்கீசியக் குடியேற்றங்களாயின.
இளவரசர் ஹென்றியின் மரணம் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இச்சமயத்தில்தான் மற்றொரு முக்கியமான நிகழ்ச்சி ஏற் பட்டது. கி.பி. 1453-ல் "ஆட்டோமான் துருக்கியர்கள்' (Ottoman Turks) கான்ஸ்டான்டிநோபிள் நகரைக் கைப்பற்றினர். இத்துடன் கிழக்கு ரோமானியப் பேரரசு வீழ்ச்சியுற்றது. இந்நிகழ்ச்சியின் விளைவு என்னவெனில், ஐரோப்பியர்கள் இதுகாறும் இந்நகரின் வழியாக நடத்திவந்த தரைவழி வாணிகம் தடைப்பட்டது. துருக்கியர்கள், இவ்வழியைப் பயன்படுத்த ஐரோப்பியர்களை அனுமதிக்கவில்லை. எகிப்து வழியாக நடந்துவந்த கடல் வணிகத்தையும் இவர்கள் தடுத்துவிட்டனர். எனவே, இந்தியா போன்ற கீழைநாடுகளை அடைய புதிய கடல் வழிகள் கண்டுபிடிக்கப்படவேண்டியதன் அவசியம் மேலும் அதிக மாயிற்று.
1488-ல் 'பார்த்தலோமியோ டயஸ்' (Barthalomew Diaz) என்ற போர்ச்சுக்கீசியர், ஆப்பிரிக்காவின் தென்கோடியை அடைந்தார். அங்குப் புயல்காற்று வீசவே அதற்குப் 'புயல்முனை' என்று பெயர் சூட்டினார் கடல்வழியாக இந்தியாவை அடையமுடியும் என்ற நம்பிக்கை போர்த்துக்கீசிய மாலுமிகளிடையே வளர ஆரம்பித்தது. ஆகவே, போர்த்துக்கீசிய மன்னராகிய இரண்டாம் ஜான், இம்முனைக்கு 'நன்னம்பிக்கை முனை' (Cape of Good Hope) என்று பெயர் சூட்டினார்.
டயஸ் சென்றவழியே பயணம்செய்து, 1497-ல் 'வாஸ்கோ-ட- காமா' (Vasco da Gama) என்ற மற்றொரு போர்த்துக்கீசியர் ஆப்பிரிக்க முனையைச்சுற்றி, கிழக்குக் கரையோரமாக வடக்கு நோக்கிச்சென்று, 'மாலிண்டி' (Malindi) என்ற இடத்தை அடைந் தார். அங்கிருந்து அராபிய மாலுமி ஒருவர் இந்தியப் பெருங் கடலின் வழியாக இந்தியாவை அடையும் வழியை இவருக்குக் காட்டினார். 1948-ல் வாஸ்கோ-ட-காமா இந்தியாவின் மேற்குக் கரையிலிருந்த கள்ளிக்கோட்டையை அடைந்தார். ஐரோப்பாவிலிருந்து தூரக்கிழக்கு நாடுகளுக்குப் புதிய கடல்வழியைக் கண்டு பிடித்ததின் நினைவாக, அவர் இங்குப் பளிங்குக் கல்லாலான தூண் ஒன்றை நினைவுச் சின்னமாக எழுப்பினார்.
16ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து போர்த்துக்கீசியக் கப்பல்கள் இப்புது வழியைப் பயன்படுத்தத் தொடங்கின. பட்டு வகைகள். விலையுயர்ந்த வைரக்கற்கள், நறுமனப் பொருள்கள் ஆகியவற்றை ஏராளமாக ஏற்றிக்கொண்டு போர்த்துக்கீசியக் கப்பல்கள் ஐரோப்பாவிற்கு வர ஆரம்பித்தன. அவர்கள், இலங்கை, சுமத்ரா, ஜாவா போன்ற தீவுகளுடனும் வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர்.
இந்த வழி கண்டுபிடிக்கப்பட்டதன்விளைவாக, மத்தியதரைக்கடல் பகுதி முக்கியத்துவத்தை இழந்தது, வெனிஸ், ஜினோவா போன்ற நகரங்கள் பொலிவிழந்து, அட்லாண்டிக் கடற்பகுதியில் அமைந்திருந்த நாடுகள், துறை முகங்கள் முக்கியத்துவம் பெறலாயின.
1500-ல் போர்ச்சுக்கல் நாட்டுப் பெட்ரோ காப்ரல்' (Pedro Cabral) என்னும் மாலுமி நன்னம்பிக்கை முனை வழியாக இந்தியா நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, புயல் காற்றினால் மேற்கு நோக்கித் தள்ளப்பட்டு தென் அமெரிக்கக் கரையை அடைந்தார். இவ்வாறு அவரால் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிதான் 'பிரேசில்' (Brazil) என வழங்கப்பட்டு, தென் அமெரிக்காமீது போர்த்துக்கீசியர் உரிமை கொண்டாடக் காரணமாக இருந்தது.
ஆசியா, ஆப்பிரிக்காக் கண்டங்களைக் காட்டிலும் அமெரிக்காக் கண்டத்தில் ஸ்பானியர்களும், போர்த்துக்கீசியர்களும் தங்கள் குடியேற்றங்களை அமைப்பதில் வெற்றிகண்டனர். இந்தப் புது உலகமக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலும், அவர்கள் கலாசாரத்துறையில் பின் தங்கியிருந்ததாலும் ஐரோப்பியர் களால் எளிதில் வெல்லப்பட்டனர். ஆப்பிரிக்காவில், ஐரோப் பியர்களின் ஊடுருவலுக்கு எதிர்ப்பு இருந்தபோதிலும் கடைசியில் அதுவும் கைப்பற்றப்பட்டது. ஆசியாவில் மக்கள் தொகை அதிகம். மேலும், இங்கு வாழ்ந்த மக்கள் மேம்பாடு அடைந்து தமக்கென ஒரு பண்பாட்டையும் பெற்றிருந்தனர். அவர்கள் ஐரோப்பியர்களின் ஊடுருவலை அறவே வெறுத்தனர். இறுதியில் ஐரோப்பிய ஆதிக்கம் ஏற்பட்ட போதிலும், ஆசிரியர்களின் பண்பாடு ஐரோப்பியர்களால் பாதிக்கப்படவில்லை.
புது உலகத்தில் தென் அமெரிக்காவின் பிரேசில் பகுதியில் தான் போர்த்துக்கீசியர்கள் தங்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. இங்கு வாழ்ந்த மக்களின் எதிர்ப்பை எளிதில் முறியடித்து, ஃபிரெஞ்சு, டச்சு, ஸ்பானியப் போட்டியையும் ஒழித்துப் போர்த்துக்கீசியர்கள் தங்கள் செல்வாக்கை இங்கு நிலை நாட்டினர். பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தெற்கில் 'சாவோ பாலோ' (Sao Paulo), வடக்கில் 'பெர்னாம்புகோ' (Pernambuco), 'பாஹியா' (Bahia) போன்ற குடியேற்றங்கள் அமைக்கப்பட்டன. 1549-ல் பிரேசில் முழுவதையும் ஆள, ஒரு கவர்னர்ஜெனரலைப் போர்த்துக்கீசிய மன்னர் நியமித்தார்.
Comments
Post a Comment